Wednesday, October 10, 2012

வினோத போட்டியில் விபரீதம் : கரப்பான் பூச்சிகளை விழுங்கி முதல் பரிசு பெற்றவர் சாவு

வினோத போட்டியில் விபரீதம் : கரப்பான் பூச்சிகளை விழுங்கி முதல் பரிசு பெற்றவர் சாவு





அமெரிக்காவில் போட்டியில் கலந்து கொண்டு கரப்பான் பூச்சிகளை சாப்பிட்டு வெற்றி பெற்ற வாலிபர் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து துடிதுடித்து இறந்தார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் டீர்பீல்டு பீச் நகரில் மிட்நைட் மேடு என்ற பெயரில் உயிருள்ள பூச்சி, புழுக்களை சாப்பிடும் வினோத போட்டி நடந்தது. இதில் 30 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். எட்வர்டு ஆர்ச்போல்ட் (32) என்ற வாலிபரும் ஆர்வத்தோடு பங்கேற்றார். 12 பெரிய சைஸ் கரப்பான் பூச்சிகளை அடுத்தடுத்து வாய்க்குள் போட்டு மென்று விழுங்கினார்.

போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். முதல் பரிசு வாங்கிய மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். ஆனால் சந்தோஷம் சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. திடீரென அவருக்கு கடுமையான வயிற்று வலியும் வாந்தியும் ஏற்பட்டது. சுருண்டு கீழே விழுந்தார். இதை பார்த்ததும் மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எட்வர்டை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள். அங்கு பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து போனது தெரிந்தது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், கரப்பான் பூச்சிகளில் விஷத்தன்மை கிடையாது. ஆனாலும் பாக்டீரியா அல்லது கேடு விளைவிக்கும் நுண்ணுயிரிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அதை சாப்பிடுவது ஆபத்தானது. சிலருக்கு கரப்பான் பூச்சி அலர்ஜியை ஏற்படுத்தும். உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருளை சாப்பிடும்போது இதுபோல நடக்கும். போட்டியாளர்களில் எட்வர்டுக்கு மட்டுமே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு இறப்புக்கான காரணம் தெரியும் என்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!