Monday, October 15, 2012

ரிலாக்ஸா இருங்க டென்ஷன்... பயம்... வேண்டாம்

ரிலாக்ஸா இருங்க டென்ஷன்... பயம்... வேண்டாம்




அழுக்கடைந்த அரை குறை ஆடைகளுடன், சுத்தமில்லாமல் சாலையில் ஏதேதோ புலம்பிக் கொண்டு செல்பவர்கள் தான் மனநோயாளிகள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அதிக மனஅழுத்தம், பயம் கொண்டவர்களும் மனநோயாளிகள் தான் என்றால் அதை நம்ப முடிகிறதா? இது உண்மைதான். ஆண்டு தோறும் அக்டோபர் 10ம் தேதி உலக மனநல நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனநல மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.  இதனால் மனநலம் பற்றிய சில தகவல்கள் இதோ உங்களுக்காக...

அதிக டென்ஷன், பதற்றம் உடையவர்களும் மனநோயாளிகள் தான். இது ஆரம்பகட்ட நிலை. இந்த நிலை தொடர்ந்தால் தீவிர மனநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என மனநல மருத்துவர் ராஜமோகன் கூறுகிறார். இதோ அவர் தரும் விளக்கங்கள்...

இளம் வயதில் ஏற்படும் அதிக மனஅழுத்தம், பதற்றம், பயம் போன்றவை மனநோய்க்கு முதல் காரணமாக அமைகிறது. குடும்ப சூழ்நிலையாலும் சிலருக்கு மனநோய் ஏற்படுகிறது. முன்பெல்லாம் 15 வயதினர் முதல் பெரியவர் வரை மனநோய் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது குழந்தைகளுக்கு கூட இந்த நோய் வருகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரப்பில் அழுத்தம் கொடுக்க கூடாது. பள்ளிக்குழந்தைகள் சிலருக்கு பாடச்சுமை காரணமாக கூட இந்த நோய் வர வாய்ப்புள்ளது.

தாக்கத்தை பொறுத்து மனநோய்கள் 4 வகையாக பிரிக்கப்படுகின்றன. அதில் முதல் இடத்தில் இருப்பது மிதமான மனநோய். இந்த நோய் உடையவர்கள் அனைவரையும் போல சாதாரணமாகவே இருப்பார்கள். ஆனால் ஒரு சில நேரங்களில் அதிக பதற்றம் ஏற்படும். சிறிய பிரச்னைக்கு கூட அதிகம் கோபம் வரும். அடிக்கடி கை கழுவுதல், பணத்தை எண்ணிக் கொண்டே இருத்தல் போன்றவை இதன் அறிகுறியாகும். இந்த நோயினால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுவதில்லை. ஆரம்ப காலத்தில் கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனை படி இந்நோயை குணப்படுத்த முடியும்.

2வது தீவிரமான மனநோய். இந்த நோய் தற்போது பள்ளிப் பருவம் தொடங்கி 50 வயது உள்ளவர்களுக்கு வருகிறது. இந்நோய் உள்ளவர்கள் கற்பனையில் வாழ்வார்கள். யாருடனும் பேசமாட்டார்கள். தனிமையில் அமர்ந்து கொண்டு எதையோ சிந்தித்திக் கொண்டே இருப்பார்கள். இந்த நோயினால் சோர்வு, வெறித்தன்மை அதிகம் ஏற்படும். அமெரிக்காவில் இதன் தாக்கம் கொண்டவர்கள் அதிகம். கட்டாயம் இதுபோன்ற நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இதை குணப்படுத்த மருந்துகள் உள்ளது. இந்த நோய் உள்ளவர்களுக்கு 6 மாத சிகிச்சை அவசியம்.

தீவிரமில்லாத மனநோய் 3வது வகை. இந்த நோய் உள்ளவர்களும் சாதாரணமாகவே இருப்பார்கள். ஆனால் அதீத பயம் காரணமாக சிறிய விஷயத்தை பெரிதாக்குவார்கள். இதுபோன்ற நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை தேவையில்லை. சைகோதெரபி மற்றும் சிறந்த ஆலோசனை மூலமாக விரைவில் இந்த நோயை குணப்படுத்த முடியும்.  உடல் சார்ந்த மனநோய் 4ம் ரகம். எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத நோயாளிகளை இதற்கு உதாரணமாக எடுத்து கொள்ளலாம். சிலர் இளம் வயதிலேயே தீராத நோயினால் அவதி அடைந்து வருவார்கள். இதனால் எப்போதும் பெரும் விரக்தியில் இருப்பார்கள். இந்த நோய் கொஞ்ச கொஞ்சமாக மனதை பாதிக்கும் தன்மை கொண்டது. உரிய சிகிச்சை மூலம் இதை குணப்படுத்தலாம்.

தகுந்த மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலமாக மனநோயை எளிதில் நிவர்த்தி செய்யலாம். மனநோய் உடையவர்களுக்கு ஆரோக்கியமான சூழல் கட்டாயம் அவசியமாகும். மேலும் இளம் வயதிலேயே கோபம், டென்ஷனை குறைக்க வேண்டும். தியானம், யோகா போன்றவை மூலம் மனதை எப்போதும் அமைதியாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருந்தால் எவ்வித மனநோயும் பாதிக்காது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!