காதலில் 'பெஸ்ட்டாக' சொதப்புவது தமிழ்நாடுதானாம்...Survey
இந்தியாவிலேயே தமிழ் நாட்டுக்காரர்களிடம்தான ரொமான்ஸ் உணர்வு குறைவாக இருக்கிறதாம். அதாவது தமிழகத்தில்தான் மிகவும் குறைந்த அளவில் காதல் திருமணங்கள் நடக்கிறதாம்.
தேசிய குடும்ப சுகாதார மையம் நடத்திய சர்வேயில்தான் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அளவிலான காதல் திருமணங்களின் சராசரி 10 ஆக உள்ளது. குறிப்பாக தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில்தான் மிகவும் குறைந்தஅளவிலான காதல் திருமணங்கள் நடைபெறுகிறதாம். தமிழகத்தில் வெறும் 2.6 சதவீத காதல் திருமணங்கள்தான், அதாவது கலப்பு திருமணங்கள்தான் நடக்கின்றனவாம்.
இந்த ஆய்வுக் கட்டுரையை குமுதின் தாஸ், கே.சி.தாஸ், டி.கே.ராய், பி.கே.திரிபாதி ஆகியோர் எழுதியுள்ளனர்.இந்த சர்வே முடிவை செய்தியாளர்களிடம் வெளியிட்டவர் வேறு யாருமல்ல, சாட்சாத் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்தான்.
அதிர்ச்சியா இருக்கே!
இந்த சர்வே முடிவை வெளியிட்டு செய்தியாளர்களிடம் திருமாளவன், இந்தியாவிலேயே அதிக அளவில் முற்போக்கான தலைவர்களும், பேச்சாளர்களும், இயக்கங்களும் தமிழகத்தில் மட்டுமே உள்ளனர். எனவே இங்குதான் காதல், கலப்பு மணங்கள் அதிகம் இருக்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால் அதற்கு நேர் மாறாக இங்கு நிலைமை உள்ளது. இது அதிர்ச்சி தருகிறது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தானை விட சற்று மேம்பட்ட நிலையில் நாம் இருக்கிறோம், அவ்வளவுதான்.
தலித்துகளை மணக்கும் பெண்கள்
தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த ஆண்களை மணக்கும் மேல் வகுப்பு பெண்களின் எண்ணிக்கையும் மிக மிக குறைவாகவே இருக்கிறது. அதாவது 1.66 சதவீதமாக மட்டுமே இது உள்ளது. டாக்டர் ராமதாஸுக்கு இந்த தகவல் போய்ச் சேரட்டும் என்றார் திருமா.
திருமண உதவித் தொகை
வி.சி.க பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் கூறுகையில், 2012-13ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசின் ஐந்து திருமண உதவித் திட்டங்கள் மூலம் ரூ. 750 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் வெறும் ரூ. 8 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது கவலை தருகிறது என்றார்.
ராமதாஸ் சொல்வது பொய்?
கடலூர் மாவட்டத்தில்தான் தலித் ஆண்கள், அதிக அளவில் உயர் ஜாதி பெண்களை மயக்கி திருமணம் செய்வதாக கூறுகிறார் டாக்டர் ராமதாஸ். உண்மையில், 2011-12ல் இந்த மாவட்டத்தில் மொத்தம் 186 பெண்களுக்கு கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவி கிடைத்துள்ளது. இந்த 186 பேரில் 184 பேர் தலித்கள் ஆவர். 2 பேர் பிராமணர்கள். எனவே டாக்டர் ராமதாஸ் சொல்வது பொய் என்பதை உணரலாம் என்றார்.
சுவாரஸ்யமான சர்வே
தமிழகத்தில் காதல் கலப்பு திருமணங்களால் கலாச்சாரம் சீர்கெடுவதாக சில கட்சிகள் லபோ திபோவென்று குதித்து காதல் திருமணங்களுக்கு எதிராக ஊர் ஊராக கூட்டம் போட்டு வரும் நிலையில் இப்படிப்ப ஒரு சர்வே முடிவு வந்திருப்பது சுவாரஸ்யம் தருகிறது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!