Friday, February 15, 2013

கடும் மழையால் வடக்கு கிழக்கு விவசாயம் பெரும் பாதிப்பு

கடும் மழையால் வடக்கு கிழக்கு விவசாயம் பெரும் பாதிப்பு



கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இரணைமடு குளத்தின் அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதையடுத்து பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

இந்த தகவலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் இடம் பெயர்ந்த பல குடும்பங்களை சேர்ந்த மக்கள் நான்கு நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டாவளை, முரசுமோட்டை, வட்டகச்சி, பன்னங்கண்டி, ஆகிய இடங்களில் உள்ள நலன்புரி முகாம்களிலே இடம் பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.




இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பெருமளவிலான நெற்பயிர் சீரழிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை பெருவெள்ளம் காரணமாக பல கிராமங்கள் நீரினால் சூழப்பட்டுள்ளதுடன்இ பொதுமக்கள் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும், பல மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையின் வடக்கே வவுனியா, முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பெய்து வருகின்ற அடை மழை காரணமாக அறுவடைக்குத் தயாராகவுள்ள சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்கதிர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்தப் பிரதேசத்தில் 4 குளங்கள் உடைப்பெடுத்திருக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளத்தின் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டிருப்பதனால் வெள்ளம் ஏற்பட்டு பெருமளவான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது வரையில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வரையில் இடம்யெபர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இடம்பெயர்ந்தவர்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கூறியிருக்கின்றார்கள்.

மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதனால்இ நிலைமை மேலும் மோசமடையலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டிருக்கின்றார்கள்.

இதேவேளை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் கனத்த மழை காரணமாக விவசாயம், மீன்பிடி மற்றும் ஏனைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் வெள்ளம் காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

மழை இன்னமும் தொடர்ந்து வருவதால், சிரமம் இன்னமும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!