நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு திடீர் மவுசு : சுவாரஸ்ய சர்வேயில் சூப்பர் தகவல்கள்
காதல் திருமணத்தைவிட நிச்சயிக்கப்படும் திருமணத்தையே இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பது லேட்டஸ்ட் சர்வேயில் தெரியவந்துள்ளது. பெண் பார்ப்பது போன்ற சடங்குகள், தடபுடல் கல்யாண விருந்து, ஹனிமூன் குறித்தும் சுவாரஸ்யமாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஐதராபாத், அகமதாபாத், நாக்பூர், சூரத், கான்பூர், லூதியானா ஆகிய 10 நகரங்களில் தாஜ் ஓட்டல் குழுமம் சார்பில் சமீபத்தில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. இப்சாஸ் என்ற மார்க்கெட் ஆய்வு நிறுவனம் இதை நடத்தியது. திருமணத்துக்கு ஆடை, நகைகள் வாங்க மால்கள், பிரதான பஜார் பகுதிக்கு வந்த 18-35 வயதினர் ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள சர்வே ரிப்போர்ட்டில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் 82% பெண்களும், 68% ஆண்களும் (சராசரியாக 75%) நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை ஆதரிக்கின்றனர்.
வடஇந்தியாவில் இதற்கு அமோக (82%) ஆதரவு இருக்கிறது.திருமணம் என்பது ஆயிரம்காலத்து பயிர் என்பார்கள். அது பார்க், பீச், தியேட்டரில் காதல் ஏற்பட்டு தீர்மானிக்கப்படுவதைவிட வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் நாலு சுவற்றுக்குள் முடிவாக வேண்டும். பெண் பார்க்கும் சடங்கு அவசியம் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. அதே நேரம், ‘மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா?’ என்று பெண்ணிடம்தான் முதலில் கேட்க வேண்டும் என்று தென்மாநிலங்களில் 21% பேர் கூறியுள்ளனர். ஆண்களின் கருத்தை முதலில் கேட்க வேண்டும் என்று நாடு முழுவதும் 10% பேர் கூறினர். வெட்டி பந்தா இல்லாமல் பெண், மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதா என்று நேருக்கு நேர் சொல்லிவிட வேண்டும் என 33% பேர் கூறினர். சம்மதத்தை முதலில் பெண்ணிடம் கேட்க வேண்டும் என்று 13% ஆண்களும், 8% பெண்களும் கூறினர்.
பெண் பார்க்கும் சம்பிரதாயத்துக்கு பிறகு, நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் மத்தியில் அதிகபட்ச வரவேற்பு இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் ‘சங்கீத்’ (வடஇந்தியாவில் திருமணத்துக்கு முந்தைய நாள் நடக்கும் மருதாணி மற்றும் இசை நிகழ்ச்சி). இதற்கு 81% ஆதரவும், இதர சம்பிரதாய சடங்குகளுக்கு 71% ஆதரவும் அளிக்கிறார்கள் இளைஞர்கள்.
பிரெண்ட்சுக்கு ‘தண்ணி பார்ட்டி’ என்றால் ரிசார்ட்டில் நடத்தலாம் என 34% பேர், டீலக்ஸ் ஓட்டலில் என 30% பேர், ஒதுக்குப்புறமான பண்ணை வீட்டில் என 13% பேரும் கூறுகின்றனர்.
கல்யாண சடங்குகளில் ஒன்றாக மேக்கப்பை குறிப்பிடுகின்றனர் 47% பேர். அதிலும் தென்மாநிலங்களில் இதற்கு அமோக ஆதரவு இருக்கிறது. 46% ஆதரவுடன் ஃபேஷியல் முதலிடத்தில் இருக்கிறது. ஸ்பா, மூலிகை சிகிச்சை 23% ஆதரவு பெற்றுள்ளன. திருமண ஜவுளி அசத்தலாக இருக்க வேண்டும் என்று 73% பேர், திருமண விழா தூள் கிளப்ப வேண்டும் என்று 65% பேர், விருந்து அமர்க்களமாக இருக்க வேண்டும் என்று 48% பேர் கூறினர்.
தென்இந்திய சமையல் மற்றும் சைனீஸ் விருந்துக்கு 56% ஓட்டு, வடஇந்திய உணவுக்கு 44% ஓட்டு கிடைத்துள்ளது. சராசரியாக 5 முதல் 15 ஐட்டங்கள் உணவில் இடம்பெற வேண்டும் என்கின்றனர் பலர். 100 முதல் 250 பேரைத்தான் திருமணத்துக்கு அழைக்க வேண்டும் என்பதில் வடக்கு, மேற்கு மாநில மக்கள் உறுதியாக இருக்க.. ‘1000 பேர் வந்தாத்தான் கல்யாணம் களைகட்டும்’ என்று அசால்ட்டாக சொல்கிறார்கள் தென்மாநில மக்கள்.
அடுத்து ஹனிமூன். கல்யாணம் முடிந்த சூட்டோடு ஒரு வாரத்துக்குள் ஹனிமூன் போக வேண்டும் என்கின்றனர் 80 சதவீதத்தினர். கோவா, ஊட்டி, ஸ்ரீநகர் என டாப்3 இடங்களை பட்டியலிட்டுள்ளனர். பாரின் தேனிலவு என்றால் ஐரோப்பிய நாடுகளை 46% பேரும், அமெரிக்காவை 36% பேரும் குறிப்பிட்டுள்ளனர். பைவ் ஸ்டார் அல்லது செவன் ஸ்டார் ஓட்டலில் தேனிலவு கொண்டாடுவது சூப்பர் என 25% பேர் கூறினர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!