12 ஆண்டுகளுக்கு முன்பு பெட்டிகளில் புதைத்து வைத்த 10 கிலோ வெடிபொருள் அழிப்பு
சித்தூர் அருகே வனப்பகுதி சாலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டு, இரு பெட்டிகளில் வைத்திருந்த 10 கிலோ வெடிப்பொருட்களை ஆந்திர போலீசார் அதிரடியாக கைப்பற்றி அழித்தனர்.ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்ட போலீசாரிடம் பிடிபட்ட நக்சலைட், மாவோயிஸ்ட்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சித்தூர் மாவட்டம், பீலேர் அடுத்த அப்பிரெட்டிகாரிபள்ளி அருகே வனப்பகுதி சாலையில், வெடிபொருட்கள் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து கடப்பா போலீசார், சித்தூர் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன் பேரில் கலக்கடா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேஜோ மூர்த்தி தலைமையில், சப்&இன்ஸ்பெக்டர்கள் அசோக் குமார், விஸ்வநாத ரெட்டி மற்றும் போலீசார் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களுடன் கடந்த 6 நாட்களாக ஏர்ராவாடி பாளையம், தலபலா, அப்பிரெட்டிகாரிபள்ளி, ஏலமந்தா கிராமங்களில் உள்ள சாலைகளில் நவீன கருவிகளுடன் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர்.இந்நிலையில் நேற்று காலை அப்பிரெட்டிகாரிபள்ளி கிராமம் அருகே வனப்பகுதியில் உள்ள சாலையில் வெடி பொருட்கள் புதைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு, சாலையை தோண்டி பார்த்தனர்.
அங்கு இரு பெட்டிகள் புதைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.அவற்றை பாதுகாப்பாக அங்கிருந்து எடுத்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அவற்றை திறந்து பார்த்த போது, இரு பெட்டிகளிலும் தலா ஒரு டிட்டர்னெட்டர், தலா 5 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் இருந்தது.வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் ரமணா ரெட்டி, பழனி, சரண்குமார், ஷியாம் பிரசாத் ஆகியோர் வனப்பகுதியில் அவற்றை அழித்தனர்.இதுகுறித்து பிலேர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி கூறுகையில், வெடி பொருட்கள் புதைக்கப்பட்டு சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது வைக்கப்பட்டு இருக்கலாம் என்றார்.முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில், அவர் திருமலை செல்லும் வழியில் அலிபிரியில் சாலையோரம் புதைக்கப்பட்ட வெடிகுண்டு மூலம் கொலை செய்ய முயற்சி நடைபெற்றது. அதில் அவர் உயிர் தப்பினார். இதைதொடர்ந்து அவரை கொலை செய்ய இப்பகுதியில் வெடி பொருட்கள் சாலையில் புதைக்கப்பட்டதா? அல்லது போலீசார் மற்றும் வனத்துறையினரை கொல்ல வைக்கப்பட்டதா? என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!