ம.பி.யில் பரிதாபம் : பணத்துக்கும் எருமைக்கும் மணப் பெண்கள் விற்பனை
மத்திய பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் குறிப்பாக அசோக்நகர், குனா போன்ற மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை காரணமாக மக்கள் தொகையில் பெண்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இதனால், ஆண்களுக்கு திருமணம் செய்து கொள்ள பெண்கள் கிடைப்பது அரிதாகி விட்டது. இதற்காக, இடைத்தரகர்களை மணமகன் வீட்டார் நாடுகின்றனர்.
அந்த இடைத்தரகர்களுக்கு ஆள் கடத்தும் கும்பல்களுடன் தொடர்பு உள்ளது. பக்கத்து மாநிலமான மகாராஷ்டிராவில் இருந்து இளம் பெண்களை கடத்தி வந்து மணமகளை விற்பனை செய்கின்றனர். சமீபத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த 14 முதல் 16வயது வரையான 3 பேரை கடத்தி மத்திய பிரதேசத்தில் ரூ35 ஆயிரம் முதல் ரூ50 ஆயிரம் வரை விற்றுள்ளனர். ரூ50 ஆயிரத்துக்கு விற்பனை செய்த பெண்ணுக்கு தரகர்கள் நிர்ணயித்த தொகை ரூ75 ஆயிரம்.
அந்த அளவுக்கு மணமகனிடம் பணம் இல்லாததால் ரூ25 ஆயிரத்துக்கு பதிலாக எருமையை பெற்றுக் கொண்டு பெண்ணை விற்றுள்ளனர். புகாரின் பேரில் மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் யோகேஷ் பர்டி தலைமையிலான போலீசார் ம.பி. சென்று அந்த பெண்களை மீட்டபோது இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. யோகேஷ் பர்டி கூறுகையில், ‘வறுமை, போதுமான விழிப்புணர்ச்சி இல்லாமை காரணமாக பாதிக்கப்படும் பெண்களும் அவர்களது குடும்பத்தாரும் போலீசில் புகார்கள் அளிப்பதில்லை. விற்பனை செய்யப்படும் பெண்களை வாங்கும் மணமகன் அந்த பெண்ணை மனைவியாக்கி கொள்வதால் அந்த பெண்கள் புகார் தர தயங்குகின்றனர். இதனால், இந்த குற்றங்களை தடுப்பது கடினமாக உள்ளது’ என்றார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!