Tuesday, January 1, 2013

விடிய விடிய களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்


விடிய விடிய களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்




தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விடிய விடிய களை கட்டியது. தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பட்டாசுகள் வெடித்தும், ஒருவருக்கு ஒருவர் ஹேப்பி நியூ இயர் சொல்லியும் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். 

2012ம் ஆண்டு முடிந்து இன்று 2013ம் ஆண்டு பிறந்து விட்டது. நேற்று இரவு 8 மணி முதலே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராயினர். சர்ச்கள், கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

சென்னையில் மெரினா கடற்கரை விழாக்கோலம் பூண்டது. இரவு 10 மணிக்குள் காமராஜர் சாலை சிவாஜி சிலையருகே உள்ள மணிக்கூண்டு பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மணிக்கூண்டில் மணி அடித்ததும் அதிர்வேட்டுகள் முழங்கின. வானில் மத்தாப்புகள் ஜொலித்தன. கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை உரத்த குரலில் தெரிவித்தனர். வண்ணப்பொடிகளை வீசியும், வண்ணப்பொடி கலந்த நீரை ஊற்றியும் புத்தாண்டு பரிமாறிக் கொண்டனர்.

அசம்பாவித சம்பவங்களை தடுக்க மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பல இடங்களில் போலீசார் தடுப்பு வைத்திருந்தனர். சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு மெரினாவில் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் நல்லவிதமாகவே அமைந்தது.

புத்தாண்டை முன்னிட்டு, வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரம் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு வெள்ளி அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

சென்னை தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 2 மணியில் இருந்து சாமி தரிசனம் அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 

பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் அதிகாலை 4 மணி முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோயிலில் 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள், மகாதீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மூலவருக்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

பூங்கா நகர் தங்க சாலை தெரு ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில்களில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. முருகன், வள்ளி, தெய்வானைக்கு நள்ளிரவு 12 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து புஷ்ப அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. 
சாந்தோம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி சர்ச், பூக்கடை அந்தோணியார் சர்ச், கதீட்ரல், பெரம்பூர் சர்ச், ராயப்பேட்டை சிஎஸ்ஐ சர்ச், லஸ் சர்ச்களில் விடிய விடிய பிரார்த்தனைகள் நடைபெற்றன. 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!