கமலின் விஸ்வரூபம் ஜனவரி 11-ம் தேதி தியேட்டர்களுக்கு வருவது சந்தேகம்!
நடிகர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதில்லை என விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளனர். இதனால் விஸ்வரூபம் திரைக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள் சென்னையில் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில், டி.டி.எச். முறையில் வெளியிடப்படும் விஸ்வரூபம் உள்பட எந்தத் திரைப்படத்துக்கும் ஒத்துழைப்பு தருவதில்லை என முடிவெடுக்கப்பட்டது.
நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்து, வரும் ஜனவரி 11-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை வழக்கமான முறையில் திரையரங்குகளில் வெளியிடுவதுடன், டி.டி.எச். முறையில் வீடுகளுக்கே நேரடியாக ரிலீஸ் செய்யவும் நடிகர் கமல் திட்டமிட்டுள்ளார். இந்தப் புதிய முறைக்கு திரையரங்க உரிமையாளர்கள் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஆனால் கமல் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
தற்போது, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து எடுத்துள்ள முடிவால், விஸ்வரூபம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆவது சந்தேகமே என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் கடைசி நேரத்தில் ஏதாவது சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு சிக்கல் தீரவும் வாய்ப்புள்ளது என்றும் சினிமா வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!