நடைப்பயிற்சி செய்தால் மூளைக்கு நல்லது: ஆய்வில் தகவல்
வயதானவர்களுக்கு நினைவுத்திறன் குறைபாடு ஏற்படுவது இயல்பு. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு படிப்படியாக அவர்களின் மூளை சுருங்கி நினைவுத்திறன் படிப்படியாக குறைந்துவிடும்.
டிமெண்டியா எனப்படும் இந்த ஞாபகத்திறன் குறைபாட்டினை உடற்பயிற்சி செய்வதன் மூலம் தடுக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட 638 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர், அதில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
மனிதர்களுக்கு வயதாகும் போது அவர்களின் மூளை சுருங்குவது இயல்பு. இப்படி மூளை சுருங்கும் போது, நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும்.
மூளையில் கட்டளைகள் உருவாகும் இடம் கிரே மேட்டர் என்கிற சாம்பல் பகுதி என்றும், அந்த கட்டளைகளை கடத்தும் பகுதி வைட் மேட்டர் என்கிற வெள்ளைப்பகுதி என்றும் இரண்டாக அறியப்படுகிறது. இதில் வயதாக ஆக, மூளையின் வெள்ளைப்பகுதி பாதிக்கப்படும். சாம்பல் பகுதி சுருங்கும்.
60- 70 வயதுகளில் இருப்பவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளை சுருங்குவதை தடுக்க முடியும் என்றும், இதன் மூலம் வயோதிகத்துடன் தொடர்புடைய டிமெண்டியா எனப்படும் நினைவிழப்பு நோயை தடுக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வயதானவர்கள் தினந்தோரும் நல்ல நடைபயிற்சி செய்தாலே அதுவும் உரிய பலன் தரும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். அதேசமயம் மூளைக்கு வேலை தரும் சுருக்கெழுத்து, சொடோகு போன்ற விளையாட்டுக்கள் வயோதிகத்தில் மூளை சுருங்காமல் தடுக்கவில்லை என்றும் இவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
உடற்பயிற்சியினால் ரத்த சுழற்சி ஊக்குவிக்கப்படுவதால், அது மூளை செல்களில் ரத்த சுழற்சியை அதிகப்படுத்தி மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதால் மூளை சுருங்காமல் தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே வயதான காலத்தில் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்புபவர்கள், தினசரி உடற்பயிற்சி அதாவது நடைப்பயிற்சி செய்வது அவசியம் என்பது ஆய்வாளர்களின் அறிவுரையாகும்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!