இலங்கை அருகே காற்றழுத்தம் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும்
இலங்கை அருகே தென் கிழக்கு வங்கக் கடலில் ஒரு மெல்லிய காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் புதுச்சேரியில் சில நாட்களாக மழை கொட்டியது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னை போன்ற பெரு நகரங்கள் மழை நீரில் தத்தளித்தன. நேற்றும் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது. நேற்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில் நேற்று மாலை வங்கக் கடலில் தென் கிழக்கு திசையில் அந்தமான் இலங்கை அருகே ஒரு மெல்லிய காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும். வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெய்த மழையில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நீலகிரி, ராமநாதபுரம், திருவாரூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய இடங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் நீலகிரியில் பொதுவாக இந்த அக்டோபரில் அதிக கனமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த முறை குறைவாக பெய்துள்ளது. அதேபோல குறைவாக பெய்ய வேண்டிய விழுப்புரத்தில் மிககனமழை பெய்துள்ளது. மீனவர்கள் மாயம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன் பிடி சீசன் நடைபெற்று வருகிறது. இதனால் வெளியூரில் இருந்து ஏராளமான மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். நாகை அக்கரைபேட்டையை சேர்ந்த வேலாயுதம் (47) என்பவரது கண்ணாடி இழை படகில் அவரும், அவரது மகன்கள் சத்தியன் (19), மாதவன் (15) ஆகியோர் கடந்த 21ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மதியம் வரை அவர்கள் கரை திரும்பாததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!