வீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?
சரஸ்வதி பூஜை நடத்த நல்ல நேரம்: காலை 10.45 - 11.45 மணி.
ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம் புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும். மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, அதன்மேல் படத்தை வைக்க வேண்டும். படத்தின் முன் இலைவிரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தண்ணீர் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். கற்பூரம் அல்லது நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள், படிப்புச் செலவிற்கு பணஉதவி ஆகியவற்றை வசதிக்கு தக்கபடி கொடுக்க வேண்டும். மறுநாள், காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் படத்தை எடுத்து விட வேண்டும். முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைக்க வேண்டும்.சரஸ்வதிபூஜை - அர்த்த்ம்: பண்டிகைகளில் பூஜை என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்கு தான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று சொல்வதில்லை. பூஜை என்ற சொல் பூஜா என்பதில் இருந்து பிறந்தது. பூ என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக வேண்டுமென்ற பொறாமை, உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இதையே சைவசித்தாந்தத்தில் ஆணவம், கன்மம், மாயை என்கிறார்கள். இந்த மும்மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவுக்கு மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது.
சாமுண்டிதேவி: நவராத்திரியில் ஒன்பதாவது நாள் தேவியானவள் சாமுண்டி மாதா என அழைக்கப்படுகிறாள். இந்த நாள் தேவிக்கு மிகவும் சிறப்பு தரும் நாளாகும். சப்தமாதர்களுள் ஒருத்திதான் சாமுண்டி. துர்க்கா தேவி மகிஷனை வதம் செய்யப் போகும் போது அவளை எதிர்த்து சண்டையிட மகிஷனின் அமைச்சர்களாகிய சண்டன், முண்டன் வந்தனர். துர்க்காதேவி தன் அம்சமான சாமுண்டி தேவியை அனுப்பி சண்டனையும் முண்டனையும் அழிக்குமாறு பணித்தாள். அசுரனின் அமைச்சர்கள் இருவரையும் வீழ்த்தியதால் அதாவது சண்ட முண்ட வதம் செய்ததால் சாமுண்டி என அவள் அழைக்கப்பட்டாள். சாமுண்டி தேவியை வழிபடுவது பண்டைய காலம் தொட்டு இருந்து வரும் வழக்கம். நாகை மாவட்டத்தில் பூவனுர் என்ற ஊரில் சாமுண்டிக்கு தனிச் சன்னதி உண்டு. சில சிவாலயங்களில் சப்தமாதர்கள் வரிசையில் சாமுண்டியின் திருவுருவம் இருக்கும். நான்கு கைகளும், மூன்று கண்களும், கோரைப் பற்களும், உக்ரமான திருமுகமும் உடைய நிலையில் இவள் உருவம் இருக்கும். புலித்தோலை ஆடையாக அணிந்திருப்பாள். கத்தி, சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியிருக்கும் இவளுடைய மற்றொரு கை அபய ஹஸ்தமாக இருக்கும். சிறிய மணிகளால் ஆகிய மாலை தாங்கியிருப்பாள். சாமுண்டி தேவியை வழிபடுவதால் ஏவல், பின்னி, சூன்யம் வைப்பு முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும். பகை, அர்த்தமற்ற அச்சம் விலகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நவராத்திரி ஒன்பதாம் ஆலயங்களில் உள்ள சப்தமாதர் வரிசையில் கொலுவிருக்கும் சாமுண்டி தேவியை வழிபட்டால் எல்லா நன்மைகளும் தேடி வரும்.
நன்றி!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் அன்பரே ... தொடர்ந்து இணைந்திருங்கள்
Delete