சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு : தமிழக கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை இன்றும் நீடிக்கும்
தமிழக கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை இன்றும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை ஓட்டிய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலைக் கொண்டுள்ளதே மழைக் காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்துள்ளது.
சென்னையிலுள்ள சாலைகளில் மழை நீர் தேங்கியிருப்பதால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன மழையால் காஞ்சிபுரத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதுபோன்று சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
விமானங்கள் தாமதம்
சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழையினால் சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய உள்நாட்டு விமானங்களில் 15 விமானங்கள் தாமதமாக வந்தன. சர்வதேச விமானங்களும் தாமதமாக வந்தன. குறிப்பாக ஜெர்மனியில் இருந்து நள்ளிரவு 11.50க்கு வரவேண்டிய லுப்தான்சா ஏர்லைன்ஸ் 1.45 மணிநேரம் தாமதமாக வந்தது. இரவு 10 மணிக்கு வரவேண்டிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 11.15க்கு வந்தது. சிங்கப்பூரில் இருந்து இரவு 10.45க்கு வர வேண்டிய டைகர் ஏர்லைன்ஸ் இரவு 11.30க்கு வந்தது.
ரயில் சர்வீஸ் பாதிப்பு
கடும் மழை காரணமாக நேற்றிரவு சென்னையில் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எழும்பூர், ஆவடி, பேசின்பிரிட்ஜ் ஆகிய ரயில் தண்டவாளங்களில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி கிடந்ததால் ரயில்கள் நிறுத்தப்பட்டன. சென்னை கடற்கரை தாம்பரம் மார்க்க ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி இயக்கப்பட்டன. சென்னை ராயபுரம் ரயில்நிலையம் அருகில் ரயில் பாதையில் மின்கம்பி அறுந்து விழுந்ததால், இன்று காலை 5.30 முதல் 7.30 மணி வரையில் அந்த பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!