Tuesday, December 4, 2012

1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்

1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்



விமானம், ஜெட் விமானம், ராக்கெட் என்று அதிவேகப் பயணங்கள் பல வந்துவிட்டாலும் அதெல்லாம் காற்றுவெளியில் மனிதனின் தரை வாகனங்களில் அதிகபட்ச வேகம் கொண்டது எது என்பது இன்னும் கூட தகராறு பிடித்த தலைப்புதான். இனி இந்தக் கேள்வியை யாரும் கேட்கக் கூடாது என்றபடி கற்பனைக்கு எட்டாத ஒரு அதிவேக ஜெட் காரை வடிவமைத்திருக்கிறது இங்கிலாந்து. மணிக்கு 1690 கிலோமீட்டர் வேகத்தில் காற்றைக் கிழிக்கக் கூடிய இந்தக் காரின் பெயர் ரத்த வேட்டையன்.

மணிக்கு 1690 கிலோமீட்டர் வேகம் என்பது தற்கொலைக்குத் துணிந்தவர்கள் மட்டுமே ட்ரை பண்ணிப் பார்க்கக் கூடியது. ஒரு கைத்துப்பாக்கியில் இருந்து வெளிவரும் புல்லட்டை விட அதிக வேகம் இது. பொதுவாக தரையில் ஒரு குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் வாகனத்தை இயக்குவது சாத்தியமில்லை. அதிவேகத்தில் பயணிக்கும்போது, வாகனத்தின் எடை வெகுவாகக் குறைந்து, விமானம் போல அது மேலெழும்பத் தயாராகிவிடும். அப்படி அது தரையோடு இருக்கும் பிடிமானத்தை இழக்கும்போது, தன் கட்டுப்பாட்டை இழந்து புரட்டியடித்து விழ வேண்டியதுதான்.

ஆனால், இதெல்லாம் அறிந்தும், தெரிந்தும், ஆராய்ச்சி செய்தும்தான் இந்த ரத்த வேட்டையனை வடிவமைத்திருக்கிறார்கள் பிரிட்டிஷ் பொறியாளர்கள். ஏற்கனவே 6.4 டன் எடையும் 13.4 மீட்டர் நீளமும் கொண்ட இந்த நீண்ட கார், அவ்வளவு சீக்கிரத்தில் தன் எடையை இழக்காது. அப்படியே மிக அதிக வேகத்தில் சென்றாலும், காற்று இதனை மேலே எழுப்பாமல் தரையை நோக்கி இன்னும் அழுத்தும்படி அதி நவீனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ஜெட் கார். ஒரு பெட்ரோல் எஞ்சின், ஒரு பிரமாண்டமான ஜெட் எஞ்சின், ஒரு ராக்கெட் எஞ்சின் என்று மூன்று எஞ்சின்கள் இதற்கு உண்டு.

வழக்கமான ஜெட் கார்களைப் போலவே இதனையும் ஓட்டி முடித்து நிறுத்துவதற்கு பாராசூட்டும் டிஸ்க் பிரேக்கும் பயன்படுகிறது. இவை அனைத்துமே டபுள் ஸ்ட்ராங் ரகம். ஆனால், இந்தப் பெருமைகள் இப்போதைக்கு வெறும் காகிதத்தில் போடப்பட்டுள்ள கணக்குகள் மட்டுமே. இன்னும் இதன் அசுர தனம் நிரூபிக்கப்படவில்லை. 1997ம் வருடம் த்ரஸ்ட் எஸ்.எஸ்.சி ஜெட் காரில் ஆன்டி கிரீன் என்பவர் மணிக்கு 1227 கி.மீ வேகத்தில் சென்றதே இன்றுவரை சாதனையாக இருக்கிறது. அதை முறியடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பிளட் ஹாண்ட் தன் சாதனைப் பயணத்துக்கு அடுத்த ஆண்டில் தான் தேதி குறித்திருக்கிறது என தெரிகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!