Thursday, November 8, 2012

கரப்பான் பூச்சிகளால் கடுப்பான பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்

கரப்பான் பூச்சிகளால் கடுப்பான பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்





ரயில் பெட்டி முழுவதும் கரப்பான் மயமாக இருந்ததால் கடுப்பான பயணிகள் அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தினர்.
ரயில்களில் கரப்பான், எலி பிரச்னை நீண்டகாலமாக உள்ளது. இதுகுறித்து அடிக்கடி புகார்கள் எழுந்தும் பலனில்லை. ரயில் பெட்டிகளில் இருந்து எலி,கரப்பான் பூச்சி போன்றவற்றை ஒழிக்க புதுப்புது தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதாக ரயில்வே அடிக்கடி கூறுகிறது.ஆனால் பலன்தான் இருப்பதாக தெரியவில்லை.அவற்றைக்கண்டு பயணிகள் அருவெறுப்பினாலும், பயத்திலும் அலறுவது வாடிக்கையாக உள்ளது.

அதேபோன்ற சம்பவம் நேற்று முன்தினமும் நடந்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நீலகிரி எக்ஸ்பிரஸ் புறப்பட தயாராக இருந்தது.ரயிலில் பயணிகள் ஒவ்வொருவராக ஏறிக்கொண்டிருந்தனர். அவர்களில் 3 அடுக்கு ஏசி பெட்டியான பி,1ல் ஏறியவர்கள் மட்டும் அலறினர். காரணம் எங்கு பார்த்தாலும் கரப்பான் பூச்சிகளாக இருந்தன. கொஞ்சம் சமாளிக்கும் திறன் உள்ள பயணிகள் வேறு வழியில்லாமல் தங்கள் உடமைகளை மேல் படுக்கையில் வைத்து விட்டு வெளியில் வந்தனர். அங்கிருந்த ஏசி பெட்டி உதவியாளர்களிடம் தெரிவித்தனர்.அவர்களும் அங்கு வந்து கரப்பான்களை விரட்ட ஆரம்பித்தனர். பயணச்சீட்டு பரிசோதகருக்கும் தெரிவிக்கப்பட்டது.வழக்கம்போல் பலனில்லை.

இந்நிலையில் அட்டவணைப்படி இரவு 9.15 மணிக்கு ரயில் புறப்பட்டது. அதனால் எரிச்சலான பயணிகள் அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற ரயில்நிலைய அதிகாரிகள் பயணிகளை சமாதானப்படுத்தினர். ஊழியர்களை வைத்து கரப்பான் பூச்சிகளை கொஞ்சம் கொன்றனர். பின்னர் நேரமாவதை கண்டு பயணிகளும் வேறுவழியில்லாமல் சமாதானமாகினர். அதன்பிறகு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கரப்பான் பூச்சிகளுடனும், பயணிகளுடனும் 10 நிமிடங்கள் தாமதமாக இரவு 9.25 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச்சென்றது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!