நேற்று டெஸ்ட் பிளைட்: ஹெலிகாப்டர் போல மேலெழுந்து, ஜெட் போல பறந்தது!
பல வாரங்கள் கடுமையான எதிர்ப்பை சந்தித்தபின், அமெரிக்க கடற்படையினர் ஜப்பானில் தமது MV-22 Osprey விமானத்தின் முதலாவது டெஸ்ட் பிளைட்டை நேற்று (வெள்ளிக்கிழமை) இயக்கினர்.
அமெரிக்க கடற்படையின் இந்த விமானம், அமெரிக்காவில் ஏற்கனவே பறக்க விடப்பட்டுள்ள போதிலும், ஜப்பானில்தான் முதல் தடவையாக நேற்று பறக்க விடப்பட்டது.
இது வழமைக்கு மாறான புதிய ரக விமானம். ஹெலிகாப்டர் போல நின்ற இடத்தில் இருந்தே மேலெழக் கூடியது. ஜெட் விமானம் போன்ற வேகத்தில் பறக்கக் கூடியது. அதாவது ரன்வே தேவையில்லை.
தெற்கு ஜப்பானில் உள்ள தற்காலிக அமெரிக்க தளத்தில் இருந்து நேற்று பறக்க விடப்பட்ட இந்த ஆஸ்பிரே விமானம், ஜப்பானில் உள்ள பிரதான அமெரிக்க விமானத் தளமான ஒகினாவாவை நிரந்தர தளமாக கொண்டு இயங்கப் போகின்றது. நேற்றைய பறத்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்ததால், திங்கட்கிழமை இந்த விமானம், ஒகினாவாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
ஒகினாவாவில் இந்த விமானத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகின்றன.
காரணம், ஏற்கனவே தயாரிப்பு நிலையில் இருந்தபோது, இந்த விமானத்தால் சரியாக பறக்க முடிந்திருக்கவில்லை. பறக்க முயற்சித்த அநேக தடவைகள், விபத்துக்குள்ளானது. இதனால், விமானம் பாதுகாப்பற்றது. அதை தமது நகரத்தின் மேல் பறக்க விட வேண்டாம் என ஒகினாவா நகர மக்கள் கடந்த சில வாரங்களாகவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், இந்த வாரம் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேடா ஜப்பானுக்கு விஜயம் செய்து, இது தொடர்பாக பேசியபின், ஜப்பானிய அரசு MV-22 Osprey விமானத்தை தமது நாட்டில் இயக்குவதற்கு அனுமதி கொடுத்துள்ளது.
“இந்த விமானம் மிகவும் பாதுகாப்பானது. விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை” என்று பனேடா உறுதிமொழி அளித்திருந்தார்.
“அவ்வளவு நம்பிக்கை இருந்தால், நியூயார்க் போன்ற ஜனநெருக்கடியுள்ள அமெரிக்க நகரம் ஒன்றின் மேலாக பறக்க விடுவதுதானே… எதற்காக நமது நகரத்தின்மேல் பறக்க வேண்டும்?” என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.
இன்னும் 10 வருடங்களில், இப்படியான விமானங்களே பயணிகள் விமானங்களாகவும் இருக்கும் என்று கூறத் தொடங்கியுள்ளார்கள்.
இந்த ரக விமானங்களின் போட்டோக்கள் சிலவற்றை தருகிறோம். பாருங்கள். வெவ்வேறு இடங்களில், நிலைகளில், கோணங்களில் எடுக்கப்பட்ட போட்டோக்கள்… சுவாரசியமாக இருக்கும்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!