Friday, September 21, 2012

சீனாவில் கோவிலில் பிச்சை எடுத்தவர்கள் வேலிச் சிறையில் அடைப்பு


சீனாவில் கோவிலில் பிச்சை எடுத்தவர்கள் வேலிச் சிறையில் அடைப்பு

                       


சீனாவில் புத்தர் கோவிலுக்கு வெளியே பிச்சை எடுத்த நபர்களை, பொலிசார் வலுக் கட்டாயமாக வேலிச் சிறையில் அடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீனாவின் ஷாங்காய் அருகே நான்சாங் நகரில் உள்ள புத்தர் கோவிலில் பிரம்மாண்ட திருவிழா நடக்கிறது. இதில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கானோர் திரண்டு வருகின்றனர்.

இந்நிலையில் புத்தர் கோவிலுக்கு வெளியே அமர்ந்து பிச்சை எடுத்த, நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை நேற்று முன்தினம் பொலிசார் அதிரடியாக அகற்றினர். கோவிலுக்குச் சற்றுத் தள்ளி கம்பி வேலி அமைத்து அவர்களை சிறை வைத்தனர்.

செய்தியை கேள்விப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுமட்டுமல்லாமல் சீன இணையத்தளங்களில் இதற்கு பலத்த விமர்சனங்கள் கிளம்பின.

மனித சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம், பொலிசின் நடவடிக்கை மனிதத் தன்மையற்ற செயல், ஆடு, மாடுகளை கொட்டிலில் அடைப்பது போன்று, பிச்சைக்காரர்களை வேலிச் சிறையில் அடைத்திருப்பது பரிதாபமாக உள்ளது என ஏராளமானோர் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.


                               


ஆனால் உள்ளூர் நிர்வாகம் இதற்கு மறுப்புத் தெரிவித்து உள்ளது. புத்தர் கோவிலுக்கு ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் வரும் சமயத்தில், கீழே அமர்ந்து பிச்சை எடுப்பவர்களை மிதித்து செல்லும் வாய்ப்பு உள்ளது.

அப்படி ஏதும் அசம்பாவிதம் நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான் அவர்களை கோவிலில் இருந்து தள்ளி வைத்து உள்ளோம் என அரசு அதிகாரி சென் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், பிச்சைக்காரர்களை அந்த இடத்தில் இருந்து செல்லுமாறு முதலில் வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் கேட்காததால் தான் கம்பி வலைக்குப் பின்னால் அடைக்க வேண்டிய நிலை உருவானது எனவும் அவர் விவரித்தார்.






                                


                                

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!