Thursday, August 9, 2012

அதிக எடையுடன் அவதியுறும் கோவில் யானைகள்


அதிக எடையுடன் அவதியுறும் கோவில் யானைகள்


 


தமிழகத்தின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் கோவில் உட்பட பல கோவில்களில் இருக்கும் யானைகளின் உடல் எடை அளவுக்கு கூடுதலாக உள்ளமை பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.

இதன் காரணமாக அந்த இரு கோவிலகளில் இருக்கும் யானைகளுக்கு கூடுதல் உடற்பயிற்சி மற்றும் உணவுக் காட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்திலுள்ள கோவில் யானைகளுக்காக அரசால் முதுமலையில் நடத்தப்படும் புத்துணர்ச்சி மற்றும் மருத்துவ முகாம்களிலும் இந்த இரு கோவில்களின் யானைகளும் பங்குபெற்றன.

புத்துணர்வு முகாமிலிருந்து வந்த யானைகள் கூடுதலாக உணவை உட்கொண்ட நிலையில் அவற்றின் எடை கூடியதை கால்நடை மருத்துவர்கள் கண்டறிந்தனர் என்று கூறுகிறார் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் செயல்அதிகாரி பொன் ஜெயராமன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

மருத்துவர்களின் பரிந்துரையை அடுத்து, 15 வயதாகும் கோவில் யானை பார்வதிக்கு இப்போது கூடுதலாக நடைபயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

கோவில் நிர்வாகம் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் காரணமாக, ஆலயத்தின் திருவிழா மற்றும் இதர நிகழ்வுகளில் பார்வதி பங்குபெறுவது எந்த வகையிலும் தடைப்படவில்லை எனவும் மீனாட்சி அம்மன் கோவிலியின் செயலதிகாரி தெரிவித்தார்.

பார்வதியின் உடல் எடையை 500 கிலோ குறைக்க தற்போது முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறும் பொன்.ஜெயராமன், அதில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் கூறுகிறார்.

தமிழகத்தின் பல கோவிலகளில் உள்ள யானைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கும் அவர், அரசின் உத்தரவின்படி இப்போது மேம்பட்ட சூழலில் கோவில் யானைகள் வைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!