அமெரிக்க கண்காணிப்பில் ஸ்டாண்சார்ட் வங்கி பணிகள் தீவிரவாத நிதியுதவி, ஹவாலா புகார்
தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி மற்றும் ஹவாலா நிதி மோசடி புகாரில் சிக்கிய எச்.எஸ்.பி.சி வங்கியை தொடர்ந்து, ஸ்டாண்சார்ட் வங்கியும் புகாரில் சிக்கியது. இந்த வங்கியின் இந்திய அவுட்சோர்சிங் பணிகளை அமெரிக்கா கண்காணிக்கிறது. தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வரும் வழிகள் குறித்து அமெரிக்க செனட் கமிட்டி ஆராய்ந்தது. அதில் எஸ்.எச்.பி.சி. வங்கியின் சர்வதேச கிளைகள் வழியாக பெறப்பட்ட பல முதலீடுகள் தீவிரவாத செயல்களுக்கு திருப்பி விடப்பட்டதாக கமிட்டியின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, அந்த வங்கியின் இந்திய கிளைகள் செயல்பாடு உட்பட பல்வேறு கணக்குகள் பற்றி அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் ஆராய்ந்து வருகின்றன.
இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த மற்றொரு முன்னணி சர்வதேச வங்கியான ஸ்டாண்சார்ட் சார்ட்டர்டு வங்கியின் இந்திய அவுட்சோர்சிங் பணிகள் பற்றி நியூயார்க் மாநில வங்கி ஆணையம், நிதி சேவை துறை ஆகியவை ஆராய்ந்தன. ஸ்டாண்சார்ட் வங்கியின் இந்திய அவுட்சோர்சிங் பணிகளிலும் கணக்கில் வராத தொகைகள் மூலம் ஹவாலா மோசடி நடந்திருக்கலாம் என்று விசாரணை அமைப்புகள் சந்தேகிக்கின்றன.
25,000 கோடி டாலர் மதிப்புள்ள நிதி நடவடிக்கைகளை அந்த வங்கி மறைத்ததாக அமெரிக்க நிதி சேவை துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிதி பல்வேறு வழிகள் மூலம் தீவிரவாதிகள், ஆயுத வியாபாரிகள், போதை கடத்தல்காரர்கள், கருப்பு பண பதுக்கல்காரர்கள் எளிதாக பெறும் வகையில் இருப்பதாக அது அச்சம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஸ்டாண்சார்ட் வங்கியின் இந்திய அவுட்சோர்சிங் பணிகள் குறித்து விரிவான விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!