Wednesday, August 8, 2012

அமெரிக்கா அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது


அமெரிக்கா அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது




கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்கா அனுப்பிய விண்கலம் ஏறத்தாழ 57 கோடி கிலோமீட்டர் பறந்து சென்று செவ்வாய் கிரகத்தில் நேற்று வெற்றிகரமாக தரையில் இறங்கியது. கியூரியாசிடி என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் உலகிலேயே மிகவும் நவீனமான ஆராய்ச்சிக்கூடம் என்று சொல்லலாம். ஒரு டன் எடையுள்ள கியூரியாசிடி மேல்கூடு இல்லாத கார் போன்று காட்சியளிக்கிறது.



இது அடுத்த இரண்டு ஆண்டுகள் செவ்வாய் கிரகத்தின் தரையில் நகர்ந்து சென்று அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்து பூமிக்கு தகவல் அனுப்பும். நேற்று தரையிறங்கிய அடுத்த வினாடியில் இருந்தே கியூரியாசிடி அபூர்வமான படங்கள் மற்றும் தகவல்களை அனுப்ப ஆரம்பித்துவிட்டது. இந்த விண்கலம் 13,000 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழாயிரம் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் எட்டு ஆண்டுகள் இடைவிடாமல் உழைத்து இதனை உருவாக்கினர்.

செவ்வாயில் மனிதனை போன்ற அல்லது வேறு வகையிலான உயிரினங்கள் இருக்கிறதா, மனிதன் உயிர்வாழ தேவையான சூழல் இருக்கிறதா என்பதை கியூரியாசிடி ஆராயும். நிலவில் நீல் ஆம்ஸ்டிராங் கால் பதித்ததை அடுத்து விண்வெளி ஆராய்ச்சியில் மனிதன் படைத்துள்ள மாபெரும் சாதனையாக கியூரியாசிடியின் தரையிறங்கலை விஞ்ஞானிகள் வர்ணிக்கின்றனர்.

எட்டு மாதங்களாக சரியான பாதையில் பயணம் செய்த கியூரியாசிடி, இந்திய நேரப்படி நேற்று காலை 11 மணிக்கு செவ்வாயில் தரையிறங்கியது. லாஸ்ஏஞ்சலஸ் அருகே உள்ள ஆய்வுக்கூடத்தில் 1,400 விஞ்ஞானிகள் அதை பதற்றத்துடன் கண்காணித்து கொண்டிருந்தனர். கலம் தரையை தொட்டதும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் தழுவி பாராட்டு தெரிவித்துக் கொண்டனர்.


அதற்கு முந்தைய 7 நிமிடங்கள் விஞ்ஞானிகள் மிகவும் பதற்றமாக இருந்தனர். மணிக்கு 20,920 கி.மீ வேகத்தில் கலம் செவ்வாயின் தரையை நோக்கி பாய்ந்தது. ஈர்ப்பு சக்தி இல்லாத நிலையில் அது கடினமான பாறையில் மோதிவிட்டால், இத்தனை ஆண்டுகள் முயற்சியும் நொடியில் வீணாகி விடும். 41 அடி விட்டமுள்ள மிகப்பெரிய பாராசூட் உதவியுடன் கலம் பத்திரமாக இறங்கியதும் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

கியூரியாசிடியில் உள்ள நவீன கருவிகள், கேமராக்கள் மூலம் எடுத்த படங்கள் உடனே பூமிக்கு வர தொடங்கின. செவ்வாயை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் மூலமாக தொடர் ஓட்டம் போன்ற முறையில் இவை பூமிக்கு வந்து சேர்கின்றன.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!