'108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!
பயங்கரத் திருடனைப் பிடிக்கப் போவதாக நினைத்து அவசரமாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸ் அதிகாரி ஒருவர் அங்கு கர்ப்பிணிப் பெண்ணொருவருக்குப் பிரசவம் பார்த்த சுவாரஸ்யமான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்க, டெக்சாஸ் நகரில் உள்ள கரோல்டன் பகுதி வழியாக போலீஸ் ரோந்து கார் ஒன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு அவசர அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய சிறுவன் ஒருவன் பதட்டமாக, எமர்ஜன்சி எனக் கூறி, ஒரு விலாசத்தை குறிப்பிட்டு உடனடியாக உதவி தேவை எனக் கூறியுள்ளான்.
திருட்டு சம்பவம் போன்ற அசம்பாவிதம் ஏதேனும் நடந்திருக்கலாம் என யூகித்த போலீஸ் அதிகாரி ஜீன் கிம்ப்டன், துப்பாக்கியைக் கையில் ஏந்தியபடி, சிறுவன் குறிப்பிட்ட விலாசத்திற்கு விரைந்துள்ளார். வீட்டிற்குள் நுழைந்த அதிகாரியை உட்புறம் உள்ள குளியலறைக்கு அழைத்துச் சென்றுள்ளான் சிறுவன்.
சிறுவன் எதற்காகத் தன்னை குளியலறைக்கு அழைத்துச் செல்கிறான் என குழப்பத்தோடு சென்ற அதிகாரிக்கு அதிர்ச்சி. குளியலறையின் உள்ளே, குழந்தையின் தலை பாதி வெளியேறிய நிலையில் அந்த சிறுவனின் தாயார் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்ததைக் கண்டுள்ளார்.
உடனே, சற்றும் தாமதிக்காமல் தனது கைகளில் உறைகளை மாட்டிக்கொண்ட ஜீன் கிம்ப்டன், அந்த பெண்ணுக்கு தைரியம் கூறி, குழந்தை முழுமையாக வெளியே வர உதவி புரிந்துள்ளார். தாயையும், சேயையும் பத்திரமாக பிரித்தெடுத்த பின்னர், உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்த ஜீன், அவர் பிரசவித்த பெண்ணையும், பிறந்த ஆண் குழந்தையையும் கரோல்டனில் உள்ள பேய்லர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க உதவியுள்ளார்.
திருடனைப் பிடிக்கப் போய் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஜீன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘எமர்ஜன்சி என்று அந்த சிறுவன் போன் செய்ததும் ஒரு திருடனை பிடிக்கப் போகிறோம் என்ற சுதாரிப்புடன் நான் துப்பாக்கியுடன் அந்த வீட்டினுள் நுழைந்தேன். ஆனால், இந்த பூமிக்கு ஒரு புதிய உயிரை அறிமுகப்படுத்திய பணியில் எனது பங்கும் உண்டு என்பதை எண்ணி மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன்' என்றார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!