Tuesday, January 15, 2013

இவர்களுக்கு ஏன் நோபல் பரிசு கொடுத்தார்கள் தெரியுமா?

இவர்களுக்கு ஏன் நோபல் பரிசு கொடுத்தார்கள் தெரியுமா?




குளோனிங் தவளை...டாலி ஆடு...


இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஜான் குர்டான். இவர் தான் முதன் முதலில் குளோனிங் மூலம் புதிதாக ஒரு உயிரை உருவாக்கியவர். விலங்கியல் துறை ஆராய்ச்சியாளரான இவர் 1962ம் ஆண்டில் Xenopus என்ற தவளையின் ஸ்டெம் செல்லில் இருந்து புதிதாக ஒரு தவளையை உருவாக்கினார். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே பின்னர் டாலி என்ற ஆட்டுக் குட்டி ஸ்டெம் செல் மூலம் உருவாக்கப்பட்டது.






Godfather of cloning....


அதாவது உயிர் அணுக்களான விந்து, முட்டை ஆகியவை சேராமல் உடலில் வேறு ஒரு செல்லையே ஒரு உயிராக உருவாக்குவதே குளோனிங் ஆகும். குளோனிங் மூலம் உயிர்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய இவர் தான், Godfather of cloning.





எல்லா செல்லும் ஒரே செல்லே...


உடலின் எல்லா செல்களிலும் உள்ள ஜீன்கள் ஒரே மாதிரியானவை என்பதை முதன் முதலில் நிரூபித்தவரும் இவரே. உடலின் ஒரு செல் ஒரு உறுப்பாக மாறிவிட்டால், அதிலிருந்து அந்த உறுப்பை மட்டுமே உருவாக்க முடியும் என்று முதலில் நம்பப்பட்டு வந்தது. ஆனால், தோலாக மாறிவிட்ட செல்லைக் கூட இதயமாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்தவர் தான் ஜான் குர்டான்.




ஒரு செல்லை எடுத்து, அதன் நியூக்ளியஸைப் பிரித்து...


தவளையின் உடலில் இருந்து ஒரு செல்லை எடுத்து, அதன் நியூக்ளியஸைப் பிரித்து, அதை தவளையின் முட்டையுடன் சேர்த்து புதிதாக தவளையை உருவாக்கினார் ஜான் குர்டான். அப்போது தான் பிறந்தது குளோனிங் தொழில்நுட்பம். இப்போது அமெரிக்காவின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள இவருக்கும் ஜப்பானிய ஆராய்ச்சியாளரான ஷின்யா யமனகா ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. யமனகாவும் ஒரு ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளரே.





'மக்கு பையன்' ஜான் குர்டான்...


ஜான் குர்டானின் தந்தை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் வங்கிப் பணியில் இருந்தவர் ஆவார். 1949ம் ஆண்டில் உயிரியல் பாடத்தில் மொத்தமுள்ள 250 மாணவர்களில் மிக மிகக் குறைவான மதிப்பெண் பெற்றவர் தான் ஜான் குர்டான். அப்போதே தான் ஒரு ஆராய்ச்சியாளராக வருவேன் என்று பள்ளியில் கூறி வந்தார். இதனால் இவரை ஆசிரியர்கள் கேலியும் கிண்டலும் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.






உருப்பட மாட்டே என்ற ஆசிரியர்கள்..


ஆசிரியர்களின் வெறும் புத்தகக் கல்வி போதனையையும் கிண்டல், கேலியையும் தாண்டி மாபெரும் ஆராய்ச்சியாளராக உருவான குர்டான், செல்களின் நியூக்லியஸைப் பிரித்து எடுத்து அதை உயிராக மாற்றிக் காட்டி ஸ்டெம் செல்-குளோனிங் ஆராய்ச்சியின் தந்தையாக விளங்குகிறார். (உலகம் பூராவுமே, எல்லா காலத்திலுமே இது போன்ற ஆசிரியர்கள் இருந்து தான் வருகின்றனர். மார்க் எடுத்தால் மட்டுமே அறிவாளி என்று கருதும் இந்த வகையான ஆசிரியர்களுக்கு இந்த நோபல் பரிசை அவர் அர்ப்பணித்துவிடலாம்)




ஷின்யா யமனகாவும் சும்மா இல்ல...


ஆனாலும், தனது ஆசிரியர்களை விட்டுக் கொடுக்க மறுக்கிறார் குர்டான். சில நேரங்களில் எனது ஆராய்ச்சிகள் தோற்கும்போது என்னைத் திட்டிய ஆசிரியர்களைத் தான் நினைத்துக் கொள்வேன். எனது ஆராய்ச்சிகளை முறையாக செய்யும் அளவுக்கு எனக்கு இன்னும் அறிவு வளரவில்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே எனக்கு அறிவில்லை என்று ஆசிரியர்கள் சொன்னது கூட சரிதான் என்று நினைத்துக் கொள்வேன் என்கிறார்.




யமனகா செய்த வேலை என்ன தெரியுமா?....


குர்டானுடன் சேர்ந்து நோபல் பரிசை வென்றுள்ள ஷின்யா யமனகா இந்த குளோனிங் ஆராய்ச்சியை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றவர் ஆவார். ஜப்பானின் குயோடா பல்கலைக்கழக பேராசிரியரான இவர் தோல்களின் செல்களை அதன் பழைய நிலைக்கு மாற்றிக் காட்டினார். அதாவது தாயின் வயிற்றில் ஒரு சிசு உருவாகும்போது, அங்கு தோல், இதயம், கண் என்று தனித்தனி உறுப்புகள் இருக்காது. அனைத்தும் இணைந்து ஒரு செல் தொகுப்பாகவே இருக்கும். இதிலிருந்து தான் பின்னர் உடலின் ஒவ்வொரு பாகமும் உருவாகும்.





செல்லை பல ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வைத்தவர்...


ஷின்யா யமனகா செய்த வேலை என்ன தெரியுமா?. நன்றாக வளர்ந்த ஒரு மனிதரின் தோல் செல்லை எடுத்து, அதை அவர் தனது தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போது அந்த செல் எப்படி இருந்திருக்குமோ, அவ்வாறு மாற்றிக் காட்டினார். அதாவது, ஒரு செல்லை பல ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வைத்தார். சரியாகச் சொன்னால், ஒரு வளர்ந்த மனிதனை மீண்டும் கருவாக மாற்றும் ஆராய்ச்சியின் ஆரம்பம் இது!. இப்போது தெரிகிறதா ஷின்யா யமனகாவும் எவ்வளவு பெரிய ஆசாமி என்று!!.


குளோனிங் கூடாது.. கூடாது... 

இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சிகள் மூலம் ஆட்டுக்குட்டி, பசு வரை உருவாக்கிவிட்டனர். மேலும் இப்போதே மனிதத் தோல் உள்ளிட்ட உடல் பாகங்களை செயற்கையாக தயாரிக்கவும் ஆரம்பித்து விட்டனர். எதிர்காலத்தில் நமது உடலின் எந்தப் பாகத்தையும் நம் உடலில் இருந்து எடுக்கும் சிறிய தசையிலிருந்து தயாரிக்க முடியும். அந்தத் திசையில் தான் குளோனிங் ஆராய்ச்சிகள் போய்க் கொண்டிருக்கின்றன.




அப்புறம் சாமியை வைத்து இவர்களால் 'வாழ' முடியாதே!... 

ஆனால், குளோனிங் மூலம் மனிதனையே உருவாக்கிவிடுவார்களோ என்ற அச்சமும் நிலவத்தான் செய்கிறது. இதனால் தான் குளோனிங் ஆராய்ச்சிகளை உலகம் முழுவதும் பல்வேறு மதத் தலைவர்களும் எதிர்த்து வருகின்றனர். அப்புறம் சாமியை வைத்து இவர்களால் 'வாழ' முடியாதே!

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!