இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையே 4000 வருட மரபணு தொடர்பு
அவுஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களுடைய மரபணுக்கூறுகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலிய கண்டத்துக்கு நாலாயிரம் ஆண்டுகள் முன்னரே குடியேற்றம் நடந்துள்ளது என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாகக் கூறுகின்றனர்.
அவுஸ்திரேலிய கண்டத்துக்குள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முதல் மனிதர்கள் சென்ற பிற்பாடு 1800-களில் ஐரோப்பியர்கள் சென்று இறங்கும் வரையில் அக்கண்டத்துக்கு இடையில் வேறு எவருமே சென்றிருக்கவில்லை.
அப்படி ஒரு கண்டம் இருந்தது வெளியுலகுக்கு தெரியாமலேயே இருந்துவந்தது என்றுதான் இதுநாள் வரை கருதப்பட்டுவருகிறது.
ஆனால் ஐரோப்பியர்கள் செல்வதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னதாகவே இந்தியாவில் இருந்து இக்கண்டத்துக்கு மனித நடமாட்டம் இருந்திருக்க வேண்டும் என்பதாக அவுஸ்திரேலிய பூர்வகுடிகளின் மரபணுக்கள் காட்டுகின்றன.
தவிர டிங்கோ என்ற காட்டு நாய்களை அவுஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தியவர்கள் இந்தியாவிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்களாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அவுஸ்திரேலிய பூர்வகுடிகளின் மரபணுத் தொகுதியில் இந்திய மரபணுக்கள் கலந்த காலகட்டமும், அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட ஃபாஸ்ஸில் படிமங்களின் அடிப்படையில் டிங்கோ காட்டு நாய்கள் அவுஸ்திரேலியாவில் தென்பட ஆரம்பித்த காலகட்டமும் ஒன்றாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இவர்களுடைய ஆய்வின் முடிவுகள் நேஷனல் அக்காடமி ஒஃப் சயின்ஸஸ் என்ற அறிவியல் மன்றத்தின் பதிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
மைக்ரோலித் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கற்கருவிகளை அவுஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தியவர்களும் இந்தியாவிலிருந்து வந்த குடியேறிகளாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!