Monday, January 14, 2013

பாம்பன் பாலத்தில் மோதியது இந்திய கடற்படையின் எண்ணைக் கப்பல்!

பாம்பன் பாலத்தில் மோதியது இந்திய கடற்படையின் எண்ணைக் கப்பல்!




ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில், கப்பல் ஒன்று மோதியதால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தக் கப்பல், கடந்த 9-ம் தேதி, ராமேஸ்வரம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாம்பனில் தரைதட்டிய இரண்டு கப்பல்களில் ஒன்று. தரைதட்டிய கப்பல்கள் பாலத்தில் மோதும் அபாயம் உண்டு என்று 9-ம் தேதியில் இருந்தே அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

ஆனால், கப்பல் மீட்கப்படாமல் விடப்பட்டிருந்தது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 9-ம் தேதி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மழையுடன் பலத்த காற்று நேற்று வீசியது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதில் பாம்பன் ரயில் பாலத்தை கடப்பதற்காக காத்திருந்த இரண்டு சரக்குக் கப்பல்கள் தரைதட்டின.

இதில் ஒன்று, இந்திய கடற்படைக்கு சொந்தமான எண்ணெய் கப்பல். மும்பைக்கு செல்லும் வழியில் ராமேஸ்வரம் கடலால் சென்றுகொண்டிருந்தது. பாம்பன் பாலம் அருகே இந்தக் கப்பல் தரை தட்டியது. பாம்பன் ரயில் பாலத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தரைதட்டிய நிலையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடலில் அதிக நீரோட்டம் காரணமாக கப்பலின் நங்கூரம் பிடி தளர்ந்ததால், அந்த கப்பல் நகர்ந்து பாலத்தின் மீது மோதியது. இதனால் 24-வது எண் பாலம் சேதமடைந்தது. இதையடுத்து, ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ராமேஸ்வரத்தில் இருந்து புவனேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை புறப்படுவதாக இருந்தது. அது ரத்து செய்யப்பட்டது. மேலும், ராமேஸ்வரம் வரும் ரயில்கள் அனைத்தும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன. மேலதிக ரயில்களை மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்த இயலாத நிலையில் ராமநாதபுரத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் நேரத்தில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!