அலகாபாத்: இந்துக்களின் புனிதத் திருவிழாக்களில் ஒன்றான மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நேற்று தொடங்கியது. இந்த கும்பமேளாவை 4 முக்கிய சங்கராச்சாரிகளும் புறக்கணித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கும்பமேளாவின் முதல் நாளில் சுமார் 85 லட்சம் பேர் புனித நீராடினர்.
நிர்வாண சாதுக்கள் ஊர்வலம்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத்தில் மகா கும்பமேளா நடைபெறும். கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி கலக்கும் என்று நம்பப்படுகிற அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் இந்த ஆண்டின் மகா கும்பமேளா மகாசங்கராந்தி நாளான நேற்று அதிகாலை 5.15 மணிக்குத் தொடங்கியது. முதலில் நாகா சாதுக்கள் எனப்படும் நிர்வாண சாதுக்கள் ஊர்வலமாக வந்து புனித நீராடினர். அவர்கள் கைகளில் சூலாயுதங்கள், கோடாரிகள் என பயங்கர ஆயுதங்களை ஏந்தியபடி உறைய வைக்கும் குளிரில் நிர்வாணமாக நீராடினர். இவர்களுக்கு முன்னதாக சாதுக்களின் அமைப்பான 'அகாடாக்களின்' தலைவர்களான மஹாமண்டலேஸ்வர்கள் யானைகளிலும் குதிரைகளிலும் ஊர்வலமாக வந்தனர்.
சாதுக்களின் அமைப்பான அகாடாக்களிடையே யார் முதலில் புனித நீராடுவது என்ற மோதல் ஏற்பட்டு பல நூறு உயிர் இழப்புகள் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு அகாடாவுக்கும் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. முதல் புனித நீராடல் மாலை 4.45 மனிக்கு நிறைவடைந்தது. முதல் நாளில் சுமார் 85 லட்சம் பேர் நீராடியிருப்பர் என்று நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
1500 பேரை காணவில்லை
முதல் முறையாக இந்தப் புனித நீராடல் நிகழ்ச்சிகள் எல்.இ.டி. திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டன. பல கோடிப் பேர் கூடக் கூடிய திருவிழா என்பதால் நெரிசலோ அல்லது தீ விபத்தோ ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது என்பதற்காக பலத்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் முதல் நாளில் மட்டும் சுமார் 1500 பேரைக் காணவில்லை என்று தெரியவந்துள்ளது. அவர்களது கதி என்ன என்று தெரியவில்லை.
சங்கராச்சாரிகள் புறக்கணிப்பு
இதனிடையே அகாடாக்களுக்கு அலகாபாத் மகா கும்பமேளா நிர்வாகம் முன்னுரிமை கொடுப்பதாகவும் தங்களுக்கான வழக்கமான இடம் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறி ஆதி சங்கரரால் நிர்மாணிக்கப்பட்ட 4 சங்கர மடங்களின் சங்கராச்சாரிகளும் கும்பமேளாவையே புறக்கணித்திருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!