விமானிகளின் தவறு: வானில் மோதி கொள்ள இருந்த இரு போயிங் 747 விமானங்கள்!
சுமார் 1000 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த இரு போயிங் 747 ஜம்போ ஜெட் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளவிருந்த விபத்து கடைசி நிமிடத்தில் தவிர்க்கப்பட்டது என தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரு விமானங்களின் விமானிகளும், தரையில் ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் இருந்து கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை சரியாக செயல்படுத்தாத காரணத்தாலேயே, இந்த பயங்கர நிலை ஏற்பட்டது எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு கட்டத்தில் இரு விமானங்களுக்கும் இடையே வெறும் 100 அடி இடைவெளி மட்டும் இருந்துள்ளது.
வானில் மோதிக்கொள்ள இருந்த இரு விமானங்களில் ஒன்று, பிரிட்டிஷ் ஏர்வேஸ் போயிங் 747 விமானம். லண்டனில் இருந்து கனடாவின் வான்கூவருக்கு அது பறந்து கொண்டிருந்தது. மற்றைய 747 விமானம், லுஃப்தான்சாவின் பிராங்பர்ட் – வாஷிங்டன் விமானம்.
வெவ்வேறு இடங்களில் புறப்பட்ட இரு விமானங்களும், ஸ்காட்லாந்து அருகே, அட்லான்டிக் சமுத்திரத்தின் மேலே பறக்கத் தொடங்குமாறு பிளைட் பிளான் கொடுக்கப்பட்டிருந்தது.
இரு விமானங்களும் அட்லான்டிக் சமுத்திர பகுதிக்கு வந்தபோது, கிளாஸ்கோ விமான நிலையத்தில் இருந்த ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவர் ரேடாரில், அவை மிக ஆபத்தான அளவில் நெருக்கமாக பறப்பதை அவதானித்தார், ஏர் ட்ராபிக் கன்ட்ரோலர்.
அபாய நிலையை உணர்ந்துகொண்ட ஏர் ட்ராபிக் கன்ட்ரோலர், இடதுபுறம் பறந்த விமானத்தை மேலும் இடதுபுறம் திரும்புமாறும், வலதுபுறம் இருந்த விமானத்தை மேலும் வலப்புறம் திருப்புமாறும் ரேடியோ சாதனம் மூலம், அறிவுறுத்தல் கொடுத்தார்.
இரு விமானங்களில் இருந்த விமானிகளும், அந்த அறிவுறுத்தலுக்கு நேர்மாறான முறையில் விமானத்தை திருப்பினர்.
அதாவது இடதுபுற விமானம் வலதுபுறம் திரும்பியது, வலதுபுற விமானம் இடதுபுறம் திரும்பியது!
அதையடுத்து இரு விமானங்களும் ஒன்றையொன்று நோக்கி பாரலலாக நெருங்கிச் செல்லத் தொடங்கின (மேலேயுள்ள வரைபடம் பார்க்கவும்).
இப்படி சிறிது நேரம் பறந்த நிலையில்தான் நல்ல வேளையாக இரு விமானங்களில் இருந்த 4 விமானிகளும், தமது விமானத்தை நோக்கி மற்றொரு விமானம் வருவதை நேரில் கண்டனர்.
4 விமானிகளும் உடனடியாக செயல்பட்டு, ஒரு விமானம் சடுதியாக மேலுயர, மற்றைய விமானம் சடுதியாக கீழ்நோக்கி டைவ் அடிக்க, மிகப் பெரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது.
இந்த விமானங்கள் அபாயகரமான அளவில் மிக நெருக்கமாக பறப்பதை ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் இருந்து அவதானித்து கூறியும், அந்த அறிவுறுத்தல் தலைகீழாக செயல்படுத்தப்பட்ட சம்பவம், சிவில் ஏவியேஷன் வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்தபோது இரு விமானங்களும் கிளாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து 30 மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்தன.
கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பற்றிய UK Airprox Board விசாரணை தற்போதுதான் முடிந்து, இந்த விஷயம் வெளியாகியுள்ளது.
ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் கன்ட்ரோலர்கள் பணிபுரியும் சூழ்நிலையையும், அங்கு விமானங்களின் நகர்வுகளை மானிட்டர் செய்ய அவர்கள் பயன்படுத்தும் ராடார் சாதனங்களையும், நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பார்க்காவிட்டால் போட்டோக்களை பார்க்கவும்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!