மறுபடியும் ஒரு மழைக்காலம்.. ஆனா ஆரம்பிச்சதுமே சென்னை திணறுதேப்பா...!
இதோ.. வட கிழக்குப் பருவ மழை தமிழகத்தின் வாசல்படிக்கு வந்து விட்டது. ஆனால் ஆரம்பிப்பதற்குள்ளாகவே சென்னை திணறிப் போய்க் கிடக்கிறது. ஒரு மழைக்கே சென்னை நகரம் திணறுகிறது. இதே நிலைதான் பல காலமாக.. நிவாரணத்தைத்தான் தேட வேண்டியிருக்கிறது.
தொடர் மழையை மக்கள் முழுமனதோடு தாங்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள்.. ஆனால் நகரம்தான் அந்த ஸ்திரத்தில் இல்லை என்பது மக்களின் கருத்தாக உள்ளது.
ஏற்கனவே சேதமடைந்து போயுள்ள சாலைகள், குண்டும் குழியுமாக காணப்படும் புறநகர்கள், சரியான மழை நீர் வடிகால்கள் இல்லாத நகரின் பெரும்பாலான பகுதிகள் என்று ஏகப்பட்ட ஓட்டைகள்.. இந்த நிலையில் மழை அடுத்த சில நாட்களில் அடை மழையாக அவதாரம் எடுத்தால் நகரம் என்னாகுமோ என்ற பயத்தில் மக்கள் உள்ளனர்.
தயார் நிலையில் இல்லாத தலைநகர்...
எப்போதுமே மழை வந்து விட்டால் போதும் சென்னை தத்தளித்துப் போய் விடும். அது சாதாரண மழையாக இருந்தால் கூட நகரமே ஸ்தம்பிக்கும். காரணம், முறையான தயார் நிலையில் அரசு இயந்திரமும், மக்களும் இல்லாததால்.
மழை நீர் வடிகால்கள் எங்கேப்பா...
நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வடிகால் வசதி இருக்கிறது என்றாலும் கூட அவை முறையாக இல்லை. பல இடங்களில் ஆக்கிரமிப்பு பல்லைக் காட்டுகிறது. இதனால் கால்வாயில் போக வேண்டிய மழை நீர் சாலைகளிலும், வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது.
கக்கூஸ் தண்ணீர் வேற...
இதில் பல இடங்களில், குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் அல்லது மழை நீர் வடிகால், கழிவு நீர் வடிகால் இல்லாத இடங்களில் கழிவறை தண்ணீரையும் கூட பலர் மழை நீர் வடிகால்களில் இணைத்து விட்டுள்ளனர். மழைக்காலத்தில் இவையெல்லாம் சாலையில் ஓடி மூக்கைப் பொத்திக் கொண்டு மிதக்கும் நிலைதான் காணப்படுகிறது.
நோய்கள் மறுபக்கம்
இப்படிப்பட்ட அசுத்தமான சூழல் காரணமாக பல்வேறு தொற்று நோய்களும் மழைக்காலத்தில் மக்களை அலைக்கழிக்கிறது.
கால்வாய்கள் அடைத்துக் கிடக்கின்றனவாம்...
சென்னை நகரில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழை நீர்க்கால்வாய்கள் பல இடங்களில் அடைத்துக் கிடப்பதாக அதிகாரிகளே சொல்கிறார்கள். இதனால் பெரு மழை வந்தால் நிச்சயம் நகரம் வெள்ளக்காடாகும் என்றும் அவர்களே கூறுகிறார்கள்.
புதிய மாநகராட்சிப் பகுதிகளில் பெரும் பீதி
சென்னை மாகநராட்சியுடன் சில காலத்திற்கு முன்பு இணைக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் கழிவு நீர் வசதி, மழை நீர் வடிகால் வசதி ஆகியவை ஏற்படுத்தப்படாமலேயே உள்ளது. இங்கெல்லாம் மக்கள் பெரும் பீதியில்தான் உள்ளனர். இந்த நிலைதான் வருடா வருடம் தொடர்கிறது.. இன்னும் எத்தனை மழைக்காலத்திற்கு நீடிக்கப் போகிறதோ...
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!