Tuesday, July 16, 2013

பால் புரட்சியால் பரிதாப நிலை காளைகள் அழிகின்றன பசுக்கள் பெருகுகின்றன

பால் புரட்சியால் பரிதாப நிலை காளைகள் அழிகின்றன பசுக்கள் பெருகுகின்றன


காங்கயம் காளை


தமிழகத்தில் விவசாயப் பணிகளுக்கு காளைகள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏர் உழவு, பரப்பு அடித்தல், கிணற்று நீர் இறைப்பு, வண்டி இழுத்தல் உள்ளிட்ட விவசாயத்தின் முக்கியமான பணிகளுக்கு காளைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. விவசாயிகளின் வாழ்வில் காளைகள் முக்கிய அம்சமாக இருந்தது. 

காலப் போக்கில் விவசாயத்தில் உழவு முதல் அறுவடை வரை அனைத்து பணிகளுக்கும் நவீன ரக இயந்திரங்களின் பயன்பாடு அதிகமாகிவிட்டது. உழவு பணிக்காக அரிதாகவே காளைகள் பயன்படுத்தப்படுகின்றன. எந்த வேலையும் இல்லாததால் காளைகள் ஒதுக்கப்பட்ட இனமாக மாறிவிட்டன. 

மாநில அளவில் 1.11 கோடி பசுக்களும், 15 லட்சம் காளைகளும் இருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், பசு மாட்டிற்கு இணையாக காளைகள் இருந்தன. தற்போது மாடுகளுடன் ஒப்பிடும் போது காளைகளின் எண்ணிக்கை 5 சதவீதம் கூடம் இல்லாமல் போய் விட்டது.  ஆயுசு முடியும் நிலையில் உள்ள காளைகள் அடிமாடாக இறைச்சி கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்புவது அதிகமாக நடக்கிறது. சில உள்ளாட்சி அமைப்புகளில் காளை மாடுகள் குப்பை வண்டி இழுக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. அழிந்து வரும் காளைகளை காக்க, கால்நடை பராமரிப்பு துறையினரும், கால்நடை பல்கலைக் கழகத்தினரும் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 

மாறாக பால் உற்பத்தியை மட்டுமே பிரதானமாக கொண்டு கலப்பின காளைகளை உருவாக்கும் முயற்சி தீவிரமாக நடக்கிறது. தற்போது மாநிலத்தில் ஜெர்சி, ஹோல்ஸ்டீன், பிரிசியன், ஜெர்சி கலப்பினம், ஹோல்ஸ்டீன் கலப்பினம், சிந்தி, காங்கயம், உம்ளாச்சேரி, பர்கூர், புலியகுளம் காளைகள் இருக்கின்றன. 

கோவை, மதுரை, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டத்தில் கருமாற்று தொழில் நுட்பம் தீவிரமாக நடக்கிறது. இதுவரை உயர்ரக காளையில் இருந்து 241 தரமான கருக்கள் பெறப்பட்டுள்ளது. 175 பசுக்களில் கருமாற்றம் செய்து வீரியம் மிக்க, அதிக பால் தரும் பசுக்களை பெறும் முயற்சி நடக்கிறது. ஈச்சங்கோட்டை, நீலகிரி, ஒசூரில் அயலின கால்நடை பண்ணை இருக்கிறது. 117 வீரிய ரக காளைகளின் மூலமாக இங்கே கடந்த ஆண்டில் 50.90 லட்சம் உறைவிந்து உற்பத்தி செய்யப்பட்டது. நடப்பாண்டில் 48.82 லட்சம் உறை விந்து உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. 

இதுவரை சுமார் 10 லட்சம் உறை விந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த உறைவிந்து குப்பிகள் திரவ நைட்ரஜன் மூலமாக கோவை, ஈரோடு, சேலம் உட்பட 20 இடங்களில் சேமிக்கப்பட்டு வருகிறது. உறை விந்து உற்பத்தியை அதிகரிக்க நடப்பாண்டில் 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மாநில அளவில் 3,429 செயற்கை முறை கருவூட்டல் நிலையங்கள் இருக்கின்றன. இங்கே உறைவிந்து மூலமாக சினை உருவாக்கும் பணி தீவிரமாக நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் சுமார் 30 லட்சம் பசுமாடுகளை உருவாக்க முயற்சி நடக்கிறது. 

தமிழக கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ மாடுகளுடன் காளைகளை இணை சேர விடும் காலம் மாறி விட்டது. தொற்று நோய் பரவலை தடுக்கவும், வீரிய ரக கன்றுகளை பெறவும் சினை ஊசி திட்டம் பரவலாக பயன்பாட்டில் இருக்கிறது. காளை கன்று கேட்பவர்கள் அரிதாக இருக்கிறார்கள். பசு மாடுகள் மூலமாக வருவாய் கிடைக்கிறது. காளைகள் உழவு பணிக்கு மட்டுமே உதவுகிறது. எனவே விவசாயிகள் காளையை தவிர்த்து வருகிறார்கள். கடந்த 2011ம் ஆண்டில் ஒரு நபருக்கு தினமும் 231 மி.லி பால் என்ற அளவில் உற்பத்தி இருந்தது. 2012ம் ஆண்டில் ஒரு நபருக்கு தேவையான பால் 265 மி.லி என்ற அளவில் உயர்ந்தது. நடப்பாண்டில் மேலும் 30 மி.லி அளவிற்கு பால் உற்பத்தி அதிகரிக்கும்,‘‘ என்றார்.

அழிவின் விளிம்பில் காங்கயம் காளைகள்: காங்கயம் காளைகள் கம்பீரத்தின் அடையாளமாக மதிக்கப்படுகிறது. காட்டெருமையை வீழ்த்தும் திறன் உள்ளதாக காங்கயம் காளைகள் கருதப்படுகிறது. இந்த காளைகள் மாநில அளவில் சில ஆயிரம் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. முரட்டு திமிலுடன் வலம் வரும் இந்த காளைகளை பராமரிப்பது சவாலானது. தரமான உணவு இருந்தால் மட்டுமே இந்த காளைகளை நன்றாக வளர்க்க முடியும். சீறி பாய்வதில் வல்லமை கொண்ட காங்கயம் காளைகள் ஜல்லிகட்டுகளும், ரேக்ளா ரேஸ்களிலும் பயன்படுத்தப்படுகிறது. 

பாரம்பரிய பெருமை மிக்க காங்கயம் இனத்தை பெருக்க சுமார் 5 லட்சம் உறை விந்து குப்பிகள் தயாராக இருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டில் ஆயிரத்திற்கும் குறைவான விவசாயிகளே காங்கயம் காளைக்கான சினை ஊசி போட முன் வந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் காங்கயம் இனம் காணாமல் போய்விடும் வாய்ப்புள்ளது.

12 லிட்டர் பால் கறக்கும்...

கடந்த காலங்களில் ஜெர்சி ரக பசுக்கள் மூலமாக அதிகளவு பால் கிடைத்தது. ஒரு ஜெர்சி ரக பசு, தினமும் 30 முதல் 35 கிலோ தீவனம் சாப்பிட்டு 7 முதல் 9 லிட்டர் பால் கொடுத்து வந்தது. ஆனால், ஹோல்ஸ்டீன் பிரிசியன் ரக பசுக்கள் தினமும் இதே அளவு தீவனம் தின்று 11 முதல் 12 லிட்டர் பால் கறக்கிறது. இதையறிந்த பால் உற்பத்தியாளர்கள், ஹோல்ஸ்டீன் பிரிசியன் ரக கன்றுகளை உருவாக்கும் சினை ஊசி கேட்டு கருவூட்டல் நிலையங்களில் குவிந்து வருகின்றனர். 

மாநில அளவில் இந்த இன மாடுகள் பால் உற்பத்திக்காக அதிகரித்து வருகிறது. ஒரே இனம் மிகவும் அதிகமானால் மரபியல் ரீதியான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே சதவீத அடிப்படையில் ஜெர்சி, சிந்தி, உம்பளாச்சேரி போன்ற பிற ரக கன்றுகளை உருவாக்கும் பணி நடக்கிறது. ஆண்டுதோறும் காளைகளின் எண்ணிக்கை 2 முதல் 3 சதவீதம் வரை குறையும் வாய்ப்புள்ளது. இனப்பெருக்கத்திற்காக மட்டுமே காளைகளை பயன்படுத்தும் நிலை உருவாகி விட்டது. 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!