உலகின் மோசமான நுழைவுத் தேர்வு இது தாங்க
சீனாவில் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கான நுழைவுத்தேர்வு இன்று முதல் நடைபெறுகிறது. சீனாவில் உள்ள மாணவ, மாணவியர் பள்ளிப் படிப்பை முடித்ததும் கல்லூரிகளுக்கு செல்ல காவ்காவ் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். சுமார் 9 மணிநேரம் நடக்கும் இந்த தேர்வுக்காக மாணவர்கள் நாள் ஒன்றுக்கு 10 மணிநேரத்திற்கும் மேல் பயிற்சி வகுப்புகளில் பலியாய் கிடக்கின்றனர். இந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று படாதபாடு படுகின்றனர். இதில் தோல்வி அடைந்தால் சிலர் தற்கொலையும் செய்கின்றனர்.
இந்நிலையில் இந்த நுழைவுத் தேர்வு இன்று முதல் நடைபெறுகிறது. சுமார் 9.2 மில்லியன் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக தேர்வு மையங்கள் பக்கம் செல்லும் டாக்சிகள் சத்தமில்லாமல் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது. மையங்களுக்கு அருகில் நடக்கும் கட்டிடப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் எலக்ட்ரானிக் கருவிகள் மூலம் மோசடி செய்வதை தடுக்க மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகிறது. மாணவிகள் மெட்டல் கொக்கி உள்ள பிரா அணிந்து வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அணிந்து வந்தால் அவை பறிமுதல் செய்யப்படும்.
சீனாவில் கல்லூரிகளுக்கு செல்ல மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சீனாவின் சிறந்த பல்கலைக்கழங்களான பீகிங், சின்குவா, பூடான் பல்கலைக்கழகங்கள் முக்கிய நகரங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
சீனர்கள் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு வந்து வசித்தாலும் வீட்டு பதிவு அமைப்பு திட்டத்தின்படி அவர்களின் குடியிருப்பு ஸ்டேடஸில்(ஹுகோ) அவர்களின் கிராமங்களின் பெயர் தான் இருக்கும். அவர்கள் எத்தனை ஆண்டுகள் நகரில் வசித்தாலும் இந்த நிலை மாறாது. முக்கிய சீன பல்கலைக்கழங்கள் நகரவாசி மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது கிராமப்புற மாணவர்களை பாதிக்கிறது. மேலும் அவர்கள் நுழைவுத் தேர்வை தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று எழுத வேண்டி இருக்கிறது.
பீஜிங்கில் வாழும் 20 மில்லியன் பேரில் 37 சதவீதம் பேருக்கு பீஜிங் ஹுகோ கிடையாது. ஹுகோ முறையில் சீர்திருத்தம் தேவை என்ற குரல் வலுத்து வருகிறது. இந்நிலையில் வரும் 2016ம் ஆண்டு முதல் குவாங்டாங் மாகாணத்தில் சமூக இன்சூரன்ஸுக்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணம் செலுத்தியவர்களின் குழந்தைகள் உள்ளூர் பல்கலைக்கழக தேர்வு எழுத அனுமதிக்கப்படவிருக்கின்றனர். இந்த திட்டம் கிழக்கு ஜியாங்சு மற்றும் ஹெனான் மாகாணங்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கிராமப்புற மாணவர்களுக்காக பல்கலைக்கழங்களில் 30,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அமெரிக்காவுக்கு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!