Tuesday, March 19, 2013

வரலாற்றில் இது முதல்முறை முழு பதவி காலம் முடித்தது பாகிஸ்தான் நாடாளுமன்றம்

வரலாற்றில் இது முதல்முறை முழு பதவி காலம் முடித்தது பாகிஸ்தான் நாடாளுமன்றம்



பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்றம் முழு பதவி காலத்தை முடித்துள்ளது. பாகிஸ்தான் உதயமாகி 66 ஆண்டுகளில் ஒரு முறை கூட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் முழு பதவி காலத்தை முடித்ததில்லை. இடைக்காலத்திலேயே ராணுவ புரட்சி, ஆட்சி கவிழ்ப்பு என்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விடும். இது வரை 12 நாடாளுமன்ற சபைகள் அற்ப ஆயுசில் முடிந்து விட்ட நிலையில், முதல் முறையாக 13வது நாடாளுமன்ற சபை நேற்று முன் தினம் முழு பதவி காலத்தை முடித்தது.

இதன்பின், சபை கலைக்கப்படுவதற்கு முன்பாக, ரேடியோவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் அஷ்ரப் உரையாற்றினார். அப்போது பாகிஸ்தானில் ஜனநாயகம் வேரூன்றியதற்கு காரணமானவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். பாகிஸ்தான் அரசியல் சட்டப்படி, ஒரு அரசு பதவி காலம் முடிந்ததும் ஆளும்கட்சியும், முக்கிய எதிர்க்கட்சியும் இணைந்து இடைக்கால பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவரது கண்காணிப்பில் தேர்தல் நடைபெற வேண்டும்.

பிரதமரை தேர்ந்தெடுப்பதில் இரு கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால், இரு கட்சிகளில் இருந்தும் தலா 4 எம்.பி.க்களை நியமித்து ஒரு குழு அமைத்து தேர்வு செய்ய வேண்டும். தற்போது ஆளும்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், எதிர்க்கட்சியான பிஎம்எல்(என்) கட்சியும் பல முறை பேசியும், இடைக்கால பிரதமரை தேர்வு செய்ய முடியவில்லை.

நாளைக்குள் கருத்தொற்றுமை ஏற்படாவிட்டால், எம்.பி.க்கள் குழு அமைக்கப்படும். அந்த குழு 3 நாட்களுக்குள் பிரதமரை தேர்வு செய்யாவிட்டால், தேர்தல் ஆணையமே இடைக்கால பிரதமரை நியமித்து, பின்னர் தேர்தலை நடத்தும்.

முஷாரப் 24ம் தேதி நாடு திரும்புகிறார்

பாகிஸ்தானில் இருந்து வெளியேறி, லண்டனிலும் துபாயிலுமாக வசித்து வரும் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் வரும் 24ம் தேதி நாடு திரும்புவதாக கூறியுள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 24ம் தேதி கராச்சிக்கு வருவதாகவும், வரும் தேர்தலில் தனது கட்சியை வழிநடத்தி செல்லப் போவதாகவும் கூறியுள்ளார். பெனாசிர் கொலை வழக்கில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதனால், நாடு திரும்பினால் கைது செய்யப்படுவோம் என்று அச்சத்தில் இது வரை அவர் பாகிஸ்தானுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!