Thursday, March 21, 2013

மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கிராமங்களின் மக்களுக்கு பிரதான தொழில் திருட்டு

மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கிராமங்களின் மக்களுக்கு பிரதான தொழில் திருட்டு


 மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கிராமங்களில் கொள்ளையடிப்பதை பிரதான தொழிலாக சிலர் மேற்கொண்டிருப்பது ரயில்வே போலீசார் விசாரணையில் ரயில்வே கொள்ளையன் தெரிவித்துள்ளான். சென்னையை சேர்ந்தவர் வரதராம். இவர் தங்க நகை கேரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் 5 மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் தங்க கட்டிகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் போது 12 கிலோ நகைகளை கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.இது தொடர்பாக ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 208 கிராம் நகைகள், சொகுசு கார்கள், சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மகாராஷ்டிராவை சேர்ந்த லட்சுமணன் ஜாகிப் யாதவ் என்பவரை கடந்த 8ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் மாவட்டம் கர்மலா தாலூகாவில் உள்ள பார்லோகி, நிம்புரே, கர்மலா, மாடா, குருதுவாடி உள்ளிட்ட 5 கிராமங்களில் உள்ள பெரும்பாலானோர் கொள்ளையடி ப்பதை முழு நேர தொழிலாக வைத்துள்ளனர். வசதி படைத்தவர்களை மட்டுமே குறி வைத்து இக்கொள்ளை சம்பவங்களை நடத்துவதாகவும், ஒவ்வொரு வழக்கிலும் ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும் போலீசாரிடம் கூறி உள்ளான்.

 கொள்ளையடிக்கப்படும் நகைகளை கடைகளுக்கு கொண்டு சென்று விற்பதில்லை. மாறாக நிம்புரே கிராமத்தை சேர்ந்த ஒரு நபரிடம் மட்டுமே விற்பனை செய்து அதற்கான பணத்தை பெற்று வந்துள்ளனர். காவலில் எடுக்கப்பட்ட லட்சுமணன் ஜாகிப் யாதவை ரயில்வே போலீசார் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கொள்ளை கும்பல் தலைவன் பதுங்கி உள்ள நிம்புரே கிராமத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால், போலீசார் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கும்பல் தலைவன் அங்கிருந்து தலைமறைவானான். மேலும் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதோடு எவ்வித தகவல்களையும் போலீசாருக்கு தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதனால் நகைகளை மீட்க முடியாமல் ஏமாற்றத்துடன் லட்சுமணன்யாதவை அழைத்துக்கொண்டு ஈரோடு இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையிலான போலீசார் திரும்பி வந்தனர். தொடர்ந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நகைகளை மீட்பதற்காக இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் அந்த கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் 7 நாள் போலீஸ்காவல் முடிவடைந்ததையடுத்து ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு லட்சுமணன் ஜாகிப் யாதவ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!