Tuesday, March 19, 2013

கு.க-வுக்கு ஆள் பிடித்து வந்தால் தங்க காசு, ப்ரிட்ஜ், நானோ கார் பரிசு!


கு.க-வுக்கு ஆள் பிடித்து வந்தால் தங்க காசு, ப்ரிட்ஜ், நானோ கார் பரிசு!– ம.பி. அரசு அதிரடி


குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சைக்கு ஆள்பிடித்து வருபவர்களுக்கு பல அதிரடி பரிசுகளை அறிவித்துள்ளது மத்தியபிரதேச மாநில அரசு. தங்கக் காசு, ப்ரிட்ஜ், நானோ கார் என கிடைக்கும் பரிசுகளை வாங்க ஆள் ஆளுக்கு வலைவீசி ஆள்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டதுதான் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை. இந்த கு.க.அறுவைச் சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு 500 ரூபாய் பணம், ஹார்லிக்ஸ் பாட்டில், அரிசியும் ஊக்கத் தொகையாக கொடுக்கின்றனர்.

ஆனால் கு.க. ஆபரேசனுக்கு ஆள் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பரிசுகள் அள்ளிக்கொடுக்கின்றனர். 500 பேரைக் கூட்டிவந்தால் நானோ கார், 50 பேர் அழைத்து வந்தால் ஒரு பிரிட்ஜ், 25 பேர் என்றால் 10கிராம் தங்கக் காசு என்று அரசே பரிசுகளை அறிவித்துள்ளது. இதற்கு ஆசைப்பட்டு மக்களைத் துரத்தித் துரத்திப் பிடிக்கும் பிடிக்கும் அவலம் மத்தியபிரதேச மாநிலத்தில் அதிகரித்துள்ளது.

யாராக இருந்தாலும் ஆபரேசன் 

திருமணம் ஆகாதவர்கள்,மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், 70 வயதானவர்கள் என அனைத்து தரப்பினருமே இவர்களின் குறிக்கோளுக்குத் தப்புவதில்லை.

மிரட்டப்படும் ஏழைகள் 

பழங்குடி மக்களும், தலித்துகளும் இவர்களின் மிரட்டலுக்கு ஆளாகின்றனர். ஏழைக் குடும்பத்தினர், அரசாங்கத்தின் இலவசப் பொருட்கள், அத்தாட்சிகள் தரப்படமாட்டாது என்ற அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணிகிறார்கள் என்றும் தகவல் வருகிறது..

இலக்கை எட்ட கட்டாயம் 

தம்பதியர் மனமொத்து குடும்பக்கட்டுபாடு அறுவைச் சிகிச்சை செய்வது என்பது வேறு. அதை விடுத்து இலக்கை அடைவதற்காக கட்டாயப்படுத்துகின்றனர் அதிகாரிகள் என்ற புகாரும் எழுந்துள்ளது.

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே 

அண்மையில் 23 வயதான ராஜ்குமார் அஹிர்வார், என்பவர் தீபக் ரசாக் என்பவருடன் மதுக்கடைக்குச் சென்றுள்ளார். குடிபோதையில் இருந்து தெளிந்த பின்னர், தான் ஒரு மருத்துவமனையில் படுத்திருப்பதை அறிந்தார். அவருடைய சட்டைப்பையில் அவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ததற்கான அத்தாட்சிக் கடிதம் இருந்ததை அறிந்து அதிர்ந்துபோனார், அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதுதான் கொடுமை.

அளவில்லாத அறுவை சிகிச்சைகள் 

ஒரு நாளைக்கு 30முதல் 50 அறுவை சிகிச்சைகளே செய்யவேண்டும் என்ற விதிமுறையையு மீறி, மருத்துவர்களே 500 அறுவை சிகிச்சைகள் செய்கின்றனர் என்றும் புகார் எழுந்துள்ளது. ஆனால், இது குறித்து மருத்துவ இணை இயக்குனர் ரஞ்சனா குப்தாவிடம் கேட்டபோது, 'இந்தப் பிரச்சினைகள் பெரிது படுத்தப்படுகின்றன'. என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!