சென்னையில் கரை தட்டிய கப்பலில் இருந்து ஊழியர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு:தரை தட்டிய கப்பலில் மீட்கப்பட்டவர் பலி!
புயல் தாக்கியதால் சென்னையில் தரை தட்டிய கப்பலில் இருந்த 32 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பலியானார். 5 பேரை காணவில்லை. அவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான 'நிலம்' புயல் கரையை கடக்க இருந்ததால், சென்னை துறைமுகத்தில் நேற்று 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதையடுத்து, சென்னை துறைமுகத்தில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டிருந்த 25 கப்பல்கள் நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு, நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டன.
கொல்கத்தாவில் இருந்து குருடாயில் ஏற்றி வந்த 'பிரதிபா காவேரி' என்ற சரக்கு கப்பல், கடந்த மாதம் சென்னை துறைமுகத்துக்கு வந்தது. சரக்குகளை இறக்கிவிட்டு துறைமுக எல்லையில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த கப்பலில் தமிழகம், மும்பை, கொல்கத்தா, உத்தரபிரதேசம், குஜராத், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாலுமிகள் மற்றும் கப்பல் கேப்டன் என மொத்தம் 37 பேர் இருந்தனர்.
சென்னை அருகே நேற்று மாலை 'நிலம்' புயல் கரையை கடந்தபோது கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது. காற்றும் பலமாக வீசியதால், 'பிரதிபா காவேரி' கப்பல் நகர்ந்து வந்து, பட்டினப்பாக்கம் அருகே தரை தட்டி நின்றது. தொடர்ந்து காற்று வீசியதால் அந்த கப்பல் மெல்ல நகர்ந்து பெசன்ட் நகர் ஊரூர்குப்பம் (எலியட்ஸ் பீச்) அருகே அடித்து செல்லப்பட்டது. கப்பலில் இருந்த ஊழியர்கள் 17 பேர் லைப் போட் மூலம் கடலில் குதித்து தப்பித்தனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், லைப் போட் கவிழ்ந்தது. தண்ணீரில் தத்தளித்த 6 பேரை மீனவர்கள் படகு மூலம் சென்று மீட்டனர். மற்றவர்கள் படகை பிடித்துக் கொண்டே கரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த ஆனந்த் மோகன்ராஜ் (30) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெசன்ட் நகரில் இருந்த அந்த கப்பல் மெல்ல மெல்ல நகர்ந்து இன்று அதிகாலை நொச்சிக்குப்பம் பகுதிக்கு வந்தது. கப்பலில் இருந்த நங்கூரம் உடைந்து விட்டதால் அது ஓரிடத்தில் நில்லாமல் அலையில் அடித்து செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கப்பலில் சிக்கியிருந்த மற்ற 20 பேரை மீட்கும் பணி இன்று காலை முடுக்கி விடப்பட்டது. முதல்கட்டமாக ஹெலிகாப்டர் மூலம் 15 பேரை பத்திரமாக மீட்டனர். 5 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்கள் கடலில் விழுந்தார்களா அல்லது கப்பலில் எங்காவது சிக்கியிருக்கிறார்களா என தெரியவில்லை. அவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு படையினரும் சென்னை போலீசாரும் படகுகளில் சென்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணியை பார்க்க கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!