'நிலம்' புயல் தாக்குதலால் பலத்த சேதம் : தமிழகம் முழுவதும் 11 பேர் பலி
'நிலம்' புயல் தாக்குதலால் சென்னை உட்பட வட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மழைக்கு இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பல இடங்களில் மரம், மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மக்கள் விடிய விடிய மின்சாரம் இன்றி இருளில் தவித்தனர். வங்கக் கடலில் உருவான 'நிலம்' புயல் நேற்று மாலை 4.45 மணியளவில் மாமல்லபுரம் வழியாக கரையை கடந்தது. அப்போது, 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. கடலில் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. பல பகுதிகளில் 150 மி.மீ. முதல் 220 மி.மீ. வரை மழை கொட்டியது.
'நிலம்' புயல் வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக கரையை கடந்தது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்தது. புயல் கரையை கடக்கும் நிகழ்வு சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால், பெரும்பாலான மாவட்டங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆங்காங்கே மர கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நேற்று மதியம் 3 மணிக்கு மேல் விடுமுறை விடப்பட்டது.
புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் கரை கடந்த நேரத்தில் பறக்கும் ரயில்கள் உள்பட பல ரயில்கள் நிறுத்தப்பட்டன. நிறைய இடங்களில் மரங்கள் விழுந்ததால் குறைந்த அளவில் பஸ்களே இயக்கப்பட்டன. புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. முறிந்து விழுந்த மரங்கள், சாய்ந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மழை காரணமாக சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், சேலம், தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ஊட்டி, குன்னூரில் கனமழையால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின. டெல்டா மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் பல லட்சம் ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
புயல் மழையால் வீடு இடிந்து விழுந்தும், மின்சாரம் தாக்கியும் பலர் உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டையில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மணி என்பவர் பலியானார். குடியாத்தம் அடுத்த ஆர்.கொல்லப்பல்லி கிராமத்தை சேர்ந்த அப்துல் சமது (60) என்பவர் வீடு இடிந்து விழுந்தது. இதில் அவரது மனைவி கைருன்னிசா (55), மகள் குல்சார் ( 30) இருவரும் அந்த இடத்திலேயே பலியாயினர். நூர்ஜகான் (25), குலாபிஜான் (23), ஷாகின் (4), அமீத் (18), முகமது (14) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். பள்ளிகொண்டாவில் இன்று காலை காட்டாற்று வெள்ளம் வீட்டில் புகுந்ததில் மணி என்பவர் மூச்சு திணறி இறந்தார். வேலூர் சைதாப்பேட்டையில் தோப்புசாமி தெருவில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் நாகப்பன் (60) இறந்தார். அரக்கோணம் அடுத்த முதூர் கிராமத்தில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மகிழேந்தி என்ற 7 வயது சிறுவன் பலியானான்.
இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வீடு இடிந்து விழுந்தது மற்றும் மின்சாரம் தாக்கியதாக இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 6 பேரும், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டத்தில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர். திருவாரூர், நாகப்பட்டினத்தில் சுமார் 1 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், மழையால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மற்றும் சேதமடைந்த வீடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு சேதம் எவ்வளவு என்பது தெரியவரும்' என்றனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!