Thursday, November 1, 2012

இலங்கை அருகே 'நிலம்' புயலில் சிக்கி சரக்கு கப்பல் மூழ்கியது: 3 பேர் பலி!

இலங்கை அருகே 'நிலம்' புயலில் சிக்கி சரக்கு கப்பல் மூழ்கியது: 3 பேர் பலி!




இலங்கை::பர்மாவில் இருந்து இந்தியாவுக்கு சாய்கோன் குயின் என்ற சரக்கு கப்பல் வந்து கொண்டிருந்தது. அந்த கப்பலில் 6 ஆயிரத்து 600 டன்னுக்கு பல்வேறு வகை மரங்கள் இருந்தன. வியட்நாம் நாட்டுக்கு சொந்தமான அந்த கப்பலில் கேப்டன் உள்பட 22 ஊழியர்கள் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு அந்த சரக்கு கப்பல் இலங்கை கடல் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது வங்க கடலில் நகர்ந்து கொண்டிருந்த நிலம் புயலில் அந்த சரக்கு கப்பல் சிக்கியது. அந்த கப்பலை புயல் அலைக்கழித்தது. புயலில் கப்பல் தத்தளித்ததால், கப்பல் கேப்டன் உதவி கோரி தகவல்கள் அனுப்பினார். இதையடுத்து இந்திய, இலங்கை, அமெரிக்க கடற்படை கப்பல்கள், அந்த சரக்கு கப்பலை மீட்க விரைந்தன.

ஆனால் சிறிது நேரத்துக்குள் புயல் நடத்திய தாண்டவத்தில் சிக்கி அந்த கப்பல் கடலுக்குள் மூழ்கியது. இதனால் அந்த கப்பலுடனான தொடர்புகள் அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சரக்கு கப்பலில் இருந்த 22 பேரும் உயிர் தப்ப கடலில் குதித்தனர்.

படகுகளில் தத்தளித்த அவர்களில் 3 பேரை அந்த வழியாக சென்ற கிரேக்க நாட்டு கப்பல் ஒன்று மீட்டது. மற்றொரு படகில் தத்தளித்த 16 பேர் மீட்கப்பட்டனர். 3 பேர் மாயமாகி விட்டனர். அவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கப்பல் கேப்டன் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அவரை மீட்க இலங்கை கடல் பகுதியில் தேடுதல் பணி நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!