Thursday, January 10, 2013

கோவையில் ஒரு நாள் ஸ்டிரைக்கால் ரூ. 1000 கோடி உற்பத்தி அவுட்


கோவையில் ஒரு நாள் ஸ்டிரைக்கால் ரூ. 1000 கோடி உற்பத்தி அவுட்


சீரான மின்சாரம் வழங்கக் கோரி நேற்று ஒரு நாள் நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் கோவையில் ரூ.1000 கோடி அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டதாக தொழிலாளர் நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் ஒன்று சேர்ந்து நேற்று சீரான மின்சார விநியோகத்தை வலியுறுத்தி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் கோவையில் நேற்று தொழில் நிறுவனங்கள் முடங்கிப் போய் விட்டன.

சென்னைக்கு மட்டும் 2 மணி நேரம், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு பல மணி நேர மின்தடை என்பது நியாயமற்றது, அநீதியானது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குமுறல் வெளியிட்டனர். இதை விடுத்து, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக, சீரான மின்தடையை மற்றும் மின் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 50,000 பேர் கலந்து கொள்ளவில்லை.

அனைத்து சிறு, குறு தொழிற்கூடங்கள் முடங்கிப் போயிருந்தன. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்த கூடங்கள் அனைத்தும் நேற்று இயங்கவில்லை. இந்த கூடங்கள் இயங்காததால்ரூ.35 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் குறு, சிறு பவுண்டரிகள் என்று பார்த்தால் சுமார் 400-க்கும் மேற்பட்டதாக உள்ளது. மொத்த பவுண்டரிகள் 600 உள்ளது. இதில் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். சீரான மின்வினியோகம் கோரி நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பவுண்டரிகள் எதுவும் இயங்கவில்லை. இதன் காரணமாக 2500 டன் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.10 கோடி ஆகும். பவுண்டரிகளை பொறுத்தவரை மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் மின்தடை பிரச்சினை மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பவுண்டரிகள் முடங்கும் நிலைக்கு தள்ளப்படும்.

கோவை மாவட்டத்தில் சிறு நூற்பாலைகள் (சிஸ்பா) சங்கத்துக்கு உட்பட்டு சுமார் 200 நூற்பாலைகள் உள்ளன. இது தவிர மொத்தம் சுமார் 750 நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. கோவையில் உள்ள அனைத்து நூற்பாலைகளும் இயங்கவில்லை. இதன் மூலம் 1 லட்சம் ஆலை தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல வில்லை. ரூ.100 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

ஸ்டிரைக் குறித்து கொடிசியா தலைவர் ஆர்.ராமச்சந்திரன் கூறுகையில், கோவையில் கொடிசியா மற்றும் இதர தொழில் அமைப்புகள், வணிக அமைப்பினர் பங்கேற்ற இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் சுமார் 40 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதன் மூலம் ரூ.1000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலை மேலும் தொடராத வகையில் தமிழக முதல்-அமைச்சர், தொழில் வணிக அமைப்பினரின் கோரிக்கையை கருணையுடன் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/10/tamilnadu-rs-1000-cr-losss-coimbatore-goes-on-strike-167706.html

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!