Tuesday, January 21, 2014

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி! எடை குறைந்த, நவீன தொழில்நுட்பம்!!

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி! எடை குறைந்த, நவீன தொழில்நுட்பம்!!




அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இந்தியாவின் அக்னி-4 பாலஸ்டிக் ரக ஏவுகணை ஒடிசா மாநிலம் பாலாசூர் சோதனை மையத்தில் நேற்று திங்கட்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

காலை 10:52 மணிக்கு வீலர் தீவிலுள்ள சோதனை மையத்தின் நான்காவது ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்ட அக்னி-4 ஏவுகணை, தனது முழு பயண தூரத்தையும் வெற்றிகரமாகக் கடந்ததாக சோதனை மையத்தின் தலைவர் எம்.வி.கே.வி. பிரசாத் தெரிவித்தார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (DRDO) அதிகாரி கருத்து தெரிவிக்கையில், “4,000 கி.மீ. தூரம் பயணித்து இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி-4 ஏவுகணையின் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்கும் வகையில் உயரிய தொழில்நுட்பங்களைக் கொண்ட நவீன கருவிகளைக் கொண்டு இயக்கி, இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது” என்றார்.

இவர் குறிப்பிடும் தொழில்நுட்பம், solid fuel rocket motor technology என்று அழைக்கப்படுகிறது.

அக்னி-4 ஏவுகணை தற்போது மூன்றாவது முறையாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முந்தைய பரிசோதனைகளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்றால், ஏவுகணையில் வீச்சை அதிகரிப்பதற்கும், பே-லோட் அளவை அதிகரிப்பதற்கும், மிகவும் எடை குறைவான விதத்தில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னி ரக ஏவுகணைகளில் அக்னி-1, 2, 3 ஆகியவை ஏற்கனவே இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ளன. தற்போது பரிசோதிக்கப்பட்டுள்ளது அக்னி-4 என குறிப்பிடப்பட்டாலும், இதைத்தான் ‘அக்னி-2 பிரைம்’ (Agni II prime) என முன்பு உருவாக்க தொடங்கினார்கள். தற்போது, பெயரை மாற்றியுள்ளார்கள்.




No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!