தண்டனை பெறும் காங். எம்.பி. – இந்திய வரலாற்றில் முதல்முறை பதவி இழக்கும் அதிஷ்டசாலி!
“பதவியில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு குற்ற வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டால், அவர்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்” என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட உத்தரவுபடி, இந்தியாவிலேயே முதல் முதலில் பதவியை பறிகொடுக்கும் நபர் என்ற பெருமையை (!) பெறப்போகிறார், காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ரஷீத் மசூது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே இது நடந்திருப்பது மற்றொரு சுவாரசியம்.
தகுதி இல்லாதவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான இடங்களை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், இந்த எம்.பி. குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரஷீத் மசூது, மத்தியில் 1990 – 1991-ம் ஆண்டுகளில் வி.பி.சிங் தலைமையிலான அரசு பதவியில் இருந்த போது அதில் சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்தார். தற்போது காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார்.
இவர் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சராக இருந்தபோது, மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் மத்திய தொகுப்பு இடங்களில் இருந்து மாநிலங்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு. அந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு சென்றது.
சி.பி.ஐ. விசாரணையில், இந்த எம்பி பணம் வாங்கிக்கொண்டு மருத்துவக் கல்லூரி சீட்களை வழங்கினார் என தெரிய வந்தது. அவர்மீது வழக்கு பதிவானது.
வழமையாக அரசியல்வாதிகள் மீதான வழக்கு இழு இழு என இழுத்துச் செல்வதுபோல இந்த வழக்கும் இழுத்துச் சென்று, இப்போது ஒரு வழியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.பி.எஸ். மாலிக் தீர்ப்பு வழங்கினார்; ரஷீத் மசூது மற்றும் இருவர் மீதான குற்றங்களை உறுதி செய்து, அவர்கள் குற்றவாளிகள் என அறிவித்துள்ளார்.
முன்பென்றால், இந்த எம்.பி.க்கு தண்டனை வழங்கப்பட்டால், அவர் பதவியில் இருந்தபடியே தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வந்துவிட முடியும். பதவிக்கு ஏதும் ஆகாது.
ஆனால், இப்போது கதை வேறு.
கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுப்படி, குற்ற வழக்குகளில் இரண்டு அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி. எம்.எல்.ஏ.க்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்.
குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ள ரஷீத் மசூதுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை விவரம் அக்டோபர் 1-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், நம்ம எம்.பி. ‘ஊழல் தடுப்புச்சட்டம் – 1988’ என்பதன்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். அந்தக் குற்றத்துக்கு, ஏழு ஆண்டுகள் வரை தண்டனை கிடைப்பது உறுதி.
சுருக்கமாக சொன்னால் அவருக்கு நிச்சயம் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கும்.
“குற்ற வழக்குகளில், 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்” என்ற புதிய உத்தரவுப்படி, முதலில் பதவியை இழக்கப் போகும் பெருமையை ரஷீத் மசூது பெறப் போகின்றார். அவரை ராஜ்யசபா எம்.பி.யாக்கிய காங்கிரஸ் கட்சியும் இந்தப் பெருமையில் சரித்திரம் படைக்கவுள்ளது!
ஏற்கனவே பலத்த சிக்கலில் இடி மேல் இடி வாங்கி கொண்டு உள்ள காங்கிரஸ் கட்சிக்கு, அடுத்த இடியாக வந்துள்ளது இந்த விவகாரம்.
போகிற போக்கில் மன்மோகன் சிங், சந்தோஷமாக துண்டை உதறிக்கொண்டு கிளம்பி விடுவார் போலிருக்கிறதே…. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டால்!
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!