சுற்றுச்சூழலுக்கான ஐ.நா.வின் உயரிய விருதை பெறும் மதுரை விஞ்ஞானி வீரபத்திரன் ராமநாதன்
இந்திய விஞ்ஞானியான வீரபத்திரன் ராமநாதனுக்கு ஐ.நா.வின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருது வழங்கப்பட உள்ளது. மதுரையில் பிறந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ. படித்துவிட்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் முதுகலைப்பட்டம் பெற்றுவிட்டு முனைவர் பட்டம் பெற அமெரிக்கா சென்றவர் வீரபத்திரன் ராமநாதன்.
அங்கு அவர் சுற்றுச்சூழல் குறித்து பல ஆய்வுகளை செய்துள்ளார். இந்நிலையில் ஐ.நா.வின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருதான சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த விருது அரசு தலைவர்கள், தனியார் நிறுவனத்தார் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு உதவுபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அவர் தற்போது கலிபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓஷனோகிராபியில் பேராசிரியராக பணிபுரிகிறார். காற்று மாசால் ஆசியாவில் தட்பவெட்ப நிலை மாறுவதை அவர் கடந்த 1997ம் ஆண்டு தனது சர்வதேச குழுவுடன் சேர்ந்து கண்டுபிடித்தார்.
இந்த உயரிய விருதை பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று ராமநாதன் தெரிவித்துள்ளார். பிளாக் கார்பன் மற்றும் மீத்தேன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்த தேவையான 16 நடவடிக்கைகள் குறித்த ஆய்வை கடந்த 2011ம் ஆண்டில் சமர்பித்த குழுவின் துணை தலைவராக ராமநாதன் இருந்தார். அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் வரும் 2050ம் ஆண்டுக்குள் சுவாசக் கோளாறுகளால் ஆண்டுதோறும் பலியாகும் 2.5 மில்லியன் பேரின் உயிரை காப்பாற்றலாம், 32 மில்லியன் பயிர் சேதத்தை கட்டுப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!