விண்கலம் என்டயர்வொரின் (Endeavour) இறுதிப் பயணம்! பார்க்க திரண்ட மக்கள்!!
விண்கலம் என்டயர்வொர், ஓய்வு பெறுகிறது. இதுவரை வானில் சுற்றிச் சுற்றிவந்த இந்த விண்கலம், தனது இறுதிப் பயணத்தை, மற்றொரு விமானத்தின் முதுகில் மேற்கொண்டது.
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் சயின்ஸ் சென்டரில் உள்ள மியூசியத்தில் இந்த விண்கலம் வைக்கப்படவுள்ளது. இவ்வளவு எடையுள்ள ஒரு விண்கலத்தை, போயிங் 747 விமானத்தின் வெயிட்-அன்டு-பேலன்ஸ் பிசகாமல் லோட் செய்வது, அவ்வளவு சுலபமான விஷயமல்ல. ஏற்கனவே சில தினங்களுக்கு முன் இந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், காலநிலை சரியில்லாத காரணத்தால், பயணம் ஒத்திப் போடப்பட்டது.
விண்கலம் என்டயர்வொர், புளோரிடாவில் உள்ள ஒபிட்டர் ப்ரோசஸிங் சென்டரை விட்டு தனது இறுதிப் பயணத்துக்கு தயாராகிறது. அமெரிக்காவின் பல மாநிலங்கள் மேலாக பறந்து, கலிபோர்னியா மாநிலத்தை சென்றடைய வேண்டும்.
இந்த க்ராஸ் கன்ட்ரி பயணத்துக்காக, நாசாவின் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட போயிங்-747 விமானத்தின்மேல், விண்கலம் பொருத்தப்பட வேண்டும். அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.
விண்கலம் அட்லான்டிஸ்ஸூம், விண்கலம் என்டயர்வொரும், ஒன்றையொன்று பார்த்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வளவு காலமும் ஒரேயிடத்தில் இருந்த இந்த இரு விண்கலங்களும் பிரிந்து, நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் இருக்கப் போகின்றன. விண்கலங்களுக்கு உயிர் இருந்தால், பிரியாவிடை பெறவேண்டிய தருணம் இது.
விண்கலம் என்டயர்வொர், நாசாவின் போயிங் 747 விமானத்தின் மேல் பகுதியில் பொருத்தப்பட்ட விதத்தை கீழேயுள்ள போட்டோவில் பார்த்துவிட்டு, அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.
இதோ, விண்கலத்தை ஏற்றிக்கொண்டு பறக்க தயாராகின்றது, நாசாவின் 747 விமானம். வழியனுப்ப காத்திருக்கும் கூட்டத்தினர், ஞாபகார்த்த போட்டோக்களை எடுத்துக் கொள்கின்றனர்.
ரன்வேயில் ஒடி டேக்-ஆஃப் செய்துவிட்டது விமானம். விமானம் செல்லும் பாதையிலும் மக்கள் காத்திருப்பதை பாருங்கள். முடிந்தவரை, திருப்பங்கள் அற்ற, உயரம் குறைவான ஃபிளைட் பிளான் கொடுக்கப்பட்டிருக்கும் என்று ஊகிக்கலாம்.
புளோரிடாவில் உள்ள ஒபிட்டர் ப்ரோசஸிங் சென்டரில் இருந்து புறப்பட்ட விமானம், அந்த மாநிலத்தை கடந்து, நியூ ஆர்லியன்ஸ் மாநிலத்தின் மேலாக பறக்கும்போது எடுக்கப்பட்ட போட்டோ இது. நியூ ஆர்லியன்ஸின் ஸ்கை-லைன்களை விமானம் கடந்து செல்வதை பாருங்கள்.
வழமையாக இந்த தொலைவு பயணத்தை போயிங் 747 விமானம் நான்-ஸ்டாப் ட்ரிப்பாக மேற்கொள்ள முடியும். ஆனால், இது கொஞ்சம் தந்திரமான பறக்க வேண்டிய பயணம் என்பதால், போகும் பாதையில், ஹியூஸ்டனில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல்லும் விதத்தில் பயணம் திட்டமிடப்பட்டது.
அதிக எரிபொருள் நிரப்பப்பட்டால், டேக்-ஆஃப் எடை அதிகம் என்பதால், புளோரிடாவில் இருந்து புறப்படும்போது, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டது.
“என்னங்க இது, பொட்டல் வெளியில் விமானம் பறக்கும் போட்டோவை போட்டிருக்கிறீர்கள்? இதில் என்ன முக்கியத்துவம்?” என்று கேட்கிறீர்களா? இந்த போட்டோவில் விமானம் மிச்சோட் பகுதிக்கு மேலாக பறக்கிறது.
நியூ ஆர்லியன்ஸ் மாநிலத்தில் உள்ள மிச்சோட் பகுதியில், நாசாவின் அசெம்பிளி நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அங்குதான், விண்கலம் என்டயர்வொரின் வெளிப் பாகங்கள் பல தயாரிக்கப்பட்டன.
விண்கலம், தாம் உருவாகிய இடத்துக்கு மேலாக தமது இறுதிப் பயணத்தை மேற்கொள்கிறது என்பதுதான், இந்த போட்டோவின் முக்கியத்துவம்.
கலிபோர்னியாவில் உள்ள கிரிஃபித் பார்க் அவதானிப்பு நிலையத்துக்கு மேலாக விமானம் திரும்புவதை இந்த போட்டோவில் காணலாம். விமானத்தில் பிளையிங் பாத் (பறக்கும் பாதை) மாற்றப்படும்போதே, இப்படியான ஆழமான கோணம் எடுக்கப்பட வேண்டும். ஆழமான கோணத்துடன், விமானம் டிசென்ட் (உயரம் குறைக்கப்படல்) பண்ணுவதையும் பாருங்கள்.
இதன் அர்த்தம், பைனல் அப்ரோச்சுக்கான பொசிஷனிங் செய்ய தொடங்குகிறது விமானம்.
உயரம் குறைந்த நிலையில் ஹாலிவூட் சைனுக்கு அருகாமையில் விமானம் பறப்பதை பாருங்கள். பொதுவாக, ஒரு விமானம் அமெரிக்க க்ராஸ் கன்ட்ரி பயணம் செய்யும்போது, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிச் சென்றால், இந்த இடத்தில் வட்டமடித்து, கிட்டத்தட்ட 160 டிகிரி திரும்ப வேண்டியிருக்கும். அப்போதுதான், விமானத்தை லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின்மேல் பொசிஷன் பண்ண முடியும்.
விண்கலத்தை தாங்கிச் சென்ற விமானம், தனியே அனுப்ப படவில்லை. துணைக்கு அமெரிக்க விமானப்படையின் போர் விமானங்களும் எஸ்கார்ட் பண்ணியபடி பறந்தன. நம்ம தமிழக அமைச்சர்கள் பயணம் செய்யும்போதே போலீஸ் எஸ்கார்ட் கொடுத்துள்ளபோது, நாசா விண்கலத்துக்கு கொடுக்க மாட்டார்களா?
இந்த இறுதிப் பயணத்தை காண்பதில் பலரும் ஆர்வம் காட்டிய காரணத்தால், லாஸ் ஏஞ்சலஸ் நகரை மூன்று தடவைகள் சுற்றி, தரிசனம் கொடுத்துவிட்டுதான், விமான நிலையத்துக்கு வந்தது. தத்தமது வீடுகளில் இருந்தே பலரும் விமானத்தை கண்டு களித்தார்கள்.
பொதுவாக வி்ண்கலத்தை காண மக்கள்தான் அது இருக்கும் இடத்தை தேடிச் செல்ல வேண்டும். இங்கு விண்கலம் மக்களை தேடி வந்து தரிசனம் கொடுத்தது… இடைத்தேர்தல் தொகுதிக்கு நம்ம அமைச்சர்கள் வருவதுபோல!
இதோ, லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் தரையிறங்க பைனல் அப்ரோச் செய்கிறது விமானம். அந்த இடத்திலும் கடைசி கிளான்ஸ் பார்க்க கூட்டம் கூடியிருந்தது.
லாஸ் ஏஞ்சலஸ் பன்னாட்டு விமான நிலையத்தின் ரன்வேயில் விமானம் இறங்குவதை போட்டோவில் காணலாம். ஒரு வழியாக தனது இறுதிப் பயணத்தை முடித்துக் கொண்டு, தரையிறங்கி விட்டது விண்கலம் என்டயர்வொர்.
இந்தப் பயணத்தின்போது இடம்பெற்ற சில சுவாரசியமான காட்சிகளை அடுத்துவரும் போட்டோக்களில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
ஹே அருமையா பொழுதுபோக்குச்சுப்ப இந்த பதிவு...
ReplyDeleteநன்றி!!
தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி வேண்டுமா..? சொடுக்குங்கள்