கடலூரில் பயங்கர சூறாவளி 500 ஏக்கர் வாழை நாசம்
கடலூர் மாவட்டத்தில் பயங்கர சூறாவளியுடன் கனமழை பெய்தது. சுழன்று அடித்த காற்றில், அறுவடைக்கு தயாரான 500 ஏக்கர் வாழைகள் முறிந்து விழுந்து நாசமானது. கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் வீசிய தானே புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட் டம். செழித்து வளர்ந்திருந்த பலா, முந்திரி, வாழை, தென்னை, மா போன்ற அனைத்து தோட்டக்கலை பயிர்களும் தானே புயலில் முழுமையாக பாதிக்கப்பட்டது. வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 7 ஆயிரம் வீதம் தானே புயல் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இந்த இழப்பீடு போதுமானதாக இல்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த பிப்ரவரியில் மீண்டும் வாழை சாகுபடியை விவசாயிகள் துவங்கினர். கடலூர் மாவட்டத்தின் மலை கிராமங்களான ராமாபுரம், புதூர், எம்.புதூர், கண்ணாரப்பேட்டை, வழிசோதனைபாளையம், வெள்ளக்கரை, அன்னவல்லி, கொடுக்கன்பாளையம், குமளங்குளம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்பட 50 கிராமங்களில் சுமார் 1000 ஏக்கரில் வாழைகள் பயிரிடப்பட்டு இருந்தன. தற்போது பூ பூத்து காய் காய்த்து வாழைகள் அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் வீசிய கனமழை விவசாயிகள் கனவை கலைத்தது. இடி, மின்னலுடன் துவங்கிய மழையில் திடீரென சூறைக்காற்று சுழன்று அடித்தது. இதில் 500 ஏக்கர் பரப்பளவில் நன்கு விளைந்திருந்த வாழைகள் முறிந்து விழுந்து நாசமானது.
இது குறித்து வாழை விவசாயி ஏழுமலை கூறியதாவது: தானேவின் பாதிப்பை அடுத்து, கடந்த பிப்ரவரியில் வாழை நடவுப்பணி தொடங்கியது. நவம்பர் மாதம் அறுவடை செய்ய தயாராக இருந்த நிலையில் சூறைக்காற்றால் அனைத்தும் நாசமாகியுள்ளது. இதனால் ஏக்கருக்கு 2 முதல் 2.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர் என்றார்.
டெல்டா மாவட்டங் களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் 50 வீடுகள் சேதமடைந்தன. 40 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!