ஹார்ட் அட்டாக் வருமா? தலைமுடியை வைத்து தெரிஞ்சுக்கலாம்
மனிதர்களின் தலைமுடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நேத்து வரைக்கும் என் கூட நல்லா பேசிட்டு இருந்தாருப்பா. திடீர்னு இறந்துட்டாரு. மாரடைப்பு வந்திருச்சாம் என்று பேசுவதை கேட்டிருப்போம். மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது. எதனால் இந்த திடீர் மரணம் என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
வேலை, குடும்பம், உடல்பருமன், மனஅழுத்தம் மற்றும் பணப் பிரச்சனைகளினால் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோயகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால், மாரடைப்பு எப்போது ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. இந்த நிலையில்தான் தலைமுடியில் உள்ள கார்டிசாலின் அடர்த்தியை வைத்து இதை கணிக்க முடியும் என ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. தலைமுடியில் உள்ள கார்டிசால் ஹார்மோன் அதிக அளவில் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளதாக ஸ்டிரஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேலில் உள்ள மெய்ர் மெடிகல் சென்டரில் அனுமதிக்கப்பட்ட, மாரடைப்பு ஏற்பட்ட 56 ஆண்களின் முடி மாதிரியையும், இதய நோயாளிகள் அல்லாத 56 ஆண்களின் முடி மாதிரியையும் பரிசோதித்தனர். இதில் மாரடைப்பு நோயாளிகளின் முடியில் கார்டிசால் அதிக அளவில் இருந்தது தெரியவந்ததாம்.
வழக்கமாக ரத்த நிணநீர், சிறுநீர் மற்றும் உமிழ்நீரில் தான் கார்டிசாலின் அளவு கண்டறியப்பட்டது. இவற்றில் சில மணி நேரத்தில் இருந்து சில நாட்கள் வரை உள்ள கார்டிசாலைத் தான் அளக்க முடியும். இதனால் நீண்ட காலமாக உள்ள அழுத்தத்தைக் கண்டறிய முடியாது. ஆனால் தலைமுடியில் உள்ள கார்டிசாலை வைத்து பல மாதங்களுக்கு முன்பே மாரடைப்பை கணிக்க முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
சாதாரணமாக நமது தலை முடி ஒவ்வொரு மாதமும் 1 செமீ வளர்கிறது. 6 செமீ நீளம் உள்ள முடியை பரிசோதனை செய்வதன் மூலம் நெடுங்காலமாக இருந்து வரும் அழுத்த அளவை அறியலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!