Tuesday, August 21, 2012

சகலத்தையும் சுத்தம் செய்யும் சமுத்திரப்புளி


சகலத்தையும் சுத்தம் செய்யும் சமுத்திரப்புளி




இயற்கையோடு இயைந்த வாழ்வு ஆதிகாலத் தமிழர்களின் வாழ்வு. இன்றிருக்கும் எத்தனையோ ரசாயனப் பொருட்களுக்குப் பதிலாக இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தத் தெரிந்திருந்தது நமக்கு. அப்படி சோப்புக்கு பதிலாக தமிழர்கள் பயன்படுத்திய பொருள்தான் சமுத்திரப் புளி எனும் ஒரு வகை கொடி மரத்தின் விதை. இன்றைய தலைமுறைக்கு கிட்டத்தட்ட அடையாளம் தெரியாது போய்விட்ட இந்த சமுத்திரப்புளியை காட்சிப் படுத்தி, அதன் பயன்பாட்டையும் எடுத்துக் கூறினார் சென்னை அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் புஷ்பா.

வெப்ப மண்டல நாடுகள் பலவற்றிலும் வளரும் இந்த சமுத்திரப் புளி எனும் கொடியை தமிழகத்தில் நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் பார்க்கலாம். இது நீர் நிலைகளின் கரையோர மரங்களில் படர்ந்து, 150 அடி வரை வளரக்கூடியது. புளியம் பழம் போலவே விதைகளை பட்டையாக மூடியிருக்கும் இதன் காய்கள், சுமார் 4 அடி முதல் 6 அடி வரை இருக்கும். விதைகளின் சுற்றளவு சுமார் இரண்டரை அங்குலம் இருக்கும். இதற்கு இருக்கி, ஆனைப்புளியன் என்ற வேறு பெயர்களும் உண்டு. தாவரவியலில் இதற்கு பெயர் என்டடா. என்டடா என்பது மலபார் பெயர். இதற்கு பெரிய விதை என்று அர்த்தம்.

இதன் விதைகள் பெரிதாக இருந்தாலும், கனம் குறைந்ததாக இருக்கும். இதனால் நீரில் மிதந்து இதர கரையோரங்களில் முளைக்கிறது. பழங்குடி மக்கள் இந்தக் கொடியின் விதைகளை மருத்துவத்துக்கும் உணவுப் பொருளாகவும் பயன்படுத்துகிறார்கள். இந்த விதைகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு. அதிகபட்சமான புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துடன், பொட்டாஷியம், பாஸ்பரஸ், மக்னீஷியம், இரும்பு, ஈயம் போன்ற மினரல்களும் இதில் காணப்படுகின்றன. விதையை மட்டுமல்லாது, முழு காயையுமே சில பழங்குடியினர் உண்கின்றனர். சமுத்திரப்புளி விதைகளை நீரில் ஊற வைத்தால், அதிலிருந்து நுரை போன்ற திரவம் நீரில் கலக்கும்.

இந்த நுரை நீரையே அந்தக் கால மனிதர்கள் குளிக்கும்போது சோப்பாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். இது தவிர, இந்த விதைகள் மெகா சைஸில் இருப்பதால் பைகள், மற்றும் இதர அழகுப் பொருட்களில் அலங்காரம் செய்யவும் பயன்படுத்தினார்கள் என்றார் அவர். இன்றும் பழங்குடியினப் பெண்கள் இந்த விதைகளை அரைத்து, இதனுடன் பாசிப் பயிறு மாவையும், சீயக்காய் தூளையும் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்துகிறார்களாம். நகைகளிலுள்ள அழுக்கைக் கழுவவும் இந்த விதை பயன்படுவதாகச் சொல்கிறார்கள். மேலை நாட்டு ரசாயன சோப்புகள்தான் இப்படிப்பட்ட பண்பாட்டைக் கழுவி விட்டதோ



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!