சி.ஐ.ஏ. டி-கிளாசிபைடு ரகசியம்: பண்ணை வீட்டில் அல்-ஸவாகியின் கடைசி டின்னர் பார்ட்டி
அமெரிக்க உளவுத்துறை செய்த பல ரகசிய ஆபரேஷன்கள் பற்றிய தகவல்கள், அந்த ஆபரேஷன்கள் முடிந்த பின்னரும் பல ஆண்டுகளுக்கு ரகசியமாகவே வைத்திருக்கப்படும். இப்படியான ரகசிய ஆவணங்களை, classified documents என்பார்கள். காலப்போக்கில் (சில ஆண்டுகளின் பின்) சில ஆவணங்களின் ரகசியங்கள் விலக்கப்படும். அதை Declassification என்பார்கள்.
இப்படியான ‘முன்னாள் ரகசியங்கள்’ அடங்கிய ஆவணங்களை, அமெரிக்காவின் தகவல் அறியும் சட்டப்படி, அமெரிக்கப் பிரஜை ஒருவர் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும். அநேக மீடியாக்கள், எந்த ரகசியங்கள் டிகிளாசிஃபை பண்ணப்படுகின்றன என கண்கொத்தி பாம்பாக கவனித்துக் கொண்டிருந்து, உடனே விண்ணப்பிப்பார்கள்.
அப்படி Declassification செய்யப்பட்ட ஆவணங்களில் ஒன்று, அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்தபோது, அப்போதைய ஈராக்கிய அல்-கய்தா தலைவர் அல்-ஸவாகி எப்படி கொல்லப்பட்டார் என்பது.
Declassification செய்யப்பட்ட ஆவணம் ஒன்றில் இருந்து, அந்த ஆபரேஷன் எப்படி நடைபெற்றது என்று இப்போது முழுமையான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவையும் சுவாரசியமாக இருக்கின்றன.
பண்ணை வீடு ஒன்றில் தங்கியிருந்தபோதே, விமானம் மூலம் குண்டு வீசப்பட்டு அல்-ஸவாகியும் வேறு சிலரும் கொல்லப்பட்டனர். குண்டு போடப்பட்ட பண்ணை வீட்டுக்கு அல்-ஸவாகி சென்ற காரணம், ஒரு டின்னர் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக. ஈராக்கிய தலைநகர் பாக்தாத்திலிருந்து சுமார் 60 கி.மீ. வடக்கே அமைந்திருந்த பண்ணை வீடு அது.
அந்த இரவு விருந்தில் கலந்து கொண்டவர்கள், அல்-ஸவாகியுடன், மூன்று பெண்களும் மூன்று ஆண்களும்.
ஆண்களில் ஷேக் அப்துல் ரஹ்மான் ஒருவர். இவர்தான் அல்-ஸவாகியின் மத ஆலோசகர். அவரை விட மற்றொரு முக்கிய நபரும் விருந்தில் கலந்து கொண்டிருக்கிறார். அவர், அல்-ஸவாகியின் நம்பிக்கைக்குரிய கூரியர். இவர் மூலமாகவே அல்-ஸவாகி தகவல்களை மற்றையவர்களுக்கு அனுப்புவது வழக்கம்.
சி.ஐ.ஏ. அல்-கய்தா தலைவர்களை தகவல் தொழில்நுட்பத்தை வைத்து உளவு பார்ப்பது தெரிய வந்தவுடன், பின்லேடன் உட்பட அல்-கய்தா முக்கியஸ்தர்கள் அனைவருமே செல்போன்களையோ, இமெயில்களையோ உபயோகிப்பதை நிறுத்தி விட்டனர். மாறாக, நம்பிக்கைக்குரிய தகவல் அனுப்புனர்களாக கூரியர்களை உபயோகிக்க தொடங்கினர்.
(பின்னாட்களில் அல்-காய்தா தலைவர் பின்லேடனின் கூரியர் ஒருவரை கண்காணித்து, அவர் மூலமாகவே பின்லேடனின் ரகசிய இருப்பிடத்தை அறிந்து அவரை கொன்றது சி.ஐ.ஏ.)
அல்-காய்தாவின் ஈராக்கிய பிரிவுக்கு தலைவராக இருந்த அல்-ஸவாகிக்கு நம்பிக்கைக்குரிய சில கூரியர்கள் இருந்தார்கள். அவர்கள் மூலமாகத்தான் அல்-ஸவாகியின் உத்தரவுகள், ஆராக்கின் பல பகுதிகளிலும் இருந்த மற்றய தளபதிகளுக்கு போய்ச் சேர்ந்து கொண்டிருந்தன.
செல்போன் உரையாடல்களை அமெரிக்கர்கள் ஒட்டுக் கேட்பார்கள் என்று தெரிந்து கொண்டு, உஷாராக கூரியர்களை பயன்படுத்திய அல்-ஸவாகிக்கு மற்றொரு விஷயம் தெரிந்திருக்கவில்லை.
அது-
அல்-ஸவாகி பயன்படுத்திய கூரியர் ஒருவரை உளவுத்துறைகள் ட்ரக் டவுன் பண்ணிவிட்டார்கள் என்ற விஷயம்.
‘உளவுத்துறைகள்’ என பன்மையில் எழுதுவதன் காரணம், அமெரிக்க உளவுத்துறையுடன், ஜோர்தானிய உளவுத்துறையும் இணைந்தே அல்-ஸவாகியின் கூரியரை ட்ராக்-டவுன் பண்ணியிருந்தன.
இந்த நபரைப் பற்றிய விபரம் முதலில் ஜோர்தானிய உளவுத்துறைக்கு தெரிய வந்தது. அதன்பின் பல வாரங்களாகவே ‘மிஸ்டர் எக்ஸ்’ என்று தங்களுக்குள் சங்கேத மொழியில் கூறிக் கொண்டிருந்தார்கள். மிஸ்டர் எக்ஸின் நடமாட்டங்கள் மீதும் கண் வைக்கத் தொடங்கினார்கள்.
ஏற்கனவே அல்-ஸவாகியின் மத ஆலோசகர் அப்துல் ரஹ்மான் இவர்களது கண்காணிப்பு வளையத்துக்குள் இருந்தாலும், அவர் அல்-ஸவாகியைச் சந்தித்ததாக தெரியவில்லை.
இதற்கிடையே மிஸ்டர் எக்ஸ், ஜோர்தானிய உளவுத்துறையின் கண்பார்வையில் இருந்து திடீரென மறைந்து போனார். அவர் ஈராக்கை விட்டு வெளியேறியிருக்கலாம் என நினைத்த ஜோர்தானிய உளவுத்துறை, அவரை ட்ராக் பண்ண சி.ஐ.ஏ.வின் உதவியை நாடியது. மிஸ்டர் எக்ஸ் தொடர்பான விபரங்கள் அனைத்தும் சி.ஐ.ஏ.வுக்கு போய் சேர்ந்தன.
இதற்கிடையே, மிஸ்டர் எக்ஸ் ஈராக்கை விட்டு வெளியேறவில்லை என்றும், பாக்தாத்துக்கு 60 கி.மீ. வடக்கேயுள்ள பண்ணைவீடு ஒன்றில் தென்படுகிறார் என்றும் ஜோர்டானிய உளவுத்துறைக்கு தெரிய வந்தது. ஏற்கனவே மிஸ்டர் எக்ஸ் பற்றிய தகவல்கள் சி.ஐ.ஏ.வுக்கு பாஸ் செய்யப் பட்டுவிட்டதால், இந்த பண்ணை வீடு பற்றிய தகவலும் கொடுக்கப்பட்டது.
அதன்பின், விவகாரத்தை முழுமையாக தமது கைகளில் எடுத்துக் கொண்டது சி.ஐ.ஏ. ஜோர்தானிய உளவுத்துறை ஒதுங்கிக் கொண்டது.
உடனே அந்த இடம் கண்காணிக்கப்பட வேண்டிய இடமாகிவிட்டது. அல்-ஸவாகி தனது கடைசி தினத்தில் அங்கே செல்வதற்கு முன்னரே அமெரிக்க ராணுவத்தின் ரேஞ்சர்கள் பண்ணை வீட்டைச் சூழவுள்ள அடர்த்தியான மரங்களில், நாள் கணக்கில் மறைந்து இருந்திருக்கிறார்கள்.
மறைந்திருந்த ராணுவ ரேஞ்சர்களுக்கும் மையக் கட்டுப்பாட்டுத் தளத்துக்கும் இடையே தகவல் தொடர்புகள் இருந்திருக்கின்றன. ஒவ்வொரு நாள் இரவிலும் பண்ணை வீட்டைச் சூழ மறைந்திருந்தவர்கள் மாறி, புதிய ஆட்கள் வந்து மறைந்திருக்கிறார்கள்.
பண்ணை வீட்டுக்கு மிஸ்டர் எக்ஸ் வந்து போய்க்கொண்டிருந்தார். ஆனால், அல்-ஸவாகி அந்தப் பக்கமே தென்படவில்லை. இருப்பினும், ராணுவ ரேஞ்சர்களை அங்கேயே நிறுத்தி வைத்திருந்தது சி.ஐ.ஏ.
இந்த நிலையில் திடீரென ஒருநாள் அடுத்த தகவல், மற்றொரு சோர்ஸிடம் இருந்து சி.ஐ.ஏ.வுக்கு கிடைத்தது – மிஸ்டர் எக்ஸ் நடமாடிய பண்ணை வீட்டுப் பகுதியை நோக்கி, அப்துல் ரஹ்மான் செல்கிறார் என்பதே அந்த தகவல்.
உடனடியாக இந்தத் தகவல் பண்ணை வீட்டைச் சூழ மறைந்திருந்த ராணுவ ரேஞ்சர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
மிஸ்டர் எக்ஸ் ஒரு பண்ணை வீட்டில் அடிக்கடி தென்படுகிறார். அதன்பின் ஒருநாள் அப்துல் ரஹ்மானும் அதே பண்ணை வீட்டை நோக்கிச் செல்கிறார் என்றவுடன், அல்-ஸவாகி அந்த பண்ணை வீட்டுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் அதிகம் என்று சி.ஐ.ஏ. புரிந்து கொண்டது.
அல்-ஸவாகியும், அப்துல் ரஹ்மானும் சந்தித்துக் கொள்ளும் ரகசிய இடமாக இந்த பண்ணை வீடு இருக்கலாம் என்பது அவர்களது ஊகம்.
உடனே பண்ணை வீட்டை நோக்கி மேலும் பல ராணுவ ரேஞ்சர்களை அனுப்ப முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அதை நடைமுறைப் படுத்த முடியாதபடி சடுதியாகக் காரியங்கள் நடந்து விட்டன.
அப்துல் ரஹ்மான் பண்ணை வீட்டுக்குள் சென்றார். அடுத்த 30 நிமிடங்களில், வேறு சில வாகனங்கள் அந்த வீட்டுக்கு முன்னே வந்து நின்றன. அதிலிருந்து இறங்கியவர்களில் ஒருவர் அல்-ஸவாகி!
அல்-ஸவாகி பண்ணை வீட்டுக்கு வந்து இறங்கியபோது அவருடன் வந்தவர்களில் ஒருவர் அல்-ஸவாகி புதிதாகத் திருமணம் செய்திருந்த 16 வயது மனைவி. அத்துடன் மிஸ்டர் எக்ஸ்ஸூம் ஏற்கனவே அதே பண்ணை வீட்டில் இருந்திருக்கிறார்.
அல்-ஸவாகி பண்ணை வீட்டுக்குள் நுழைந்துவிட்டார் என்ற விபரத்தை, அங்கே மறைந்திருந்த ராணுவ ரேஞ்சர்கள் உடனடியாக சி.ஐ.ஏ.வுக்கு அறிவித்தார்கள். “புதிதாக மேலதிக ஆட்களை அனுப்பினால், அந்தச் சத்தத்தில் அல்-ஸவாகி உஷாராகித் தப்பிவிடலாம் என்பதால், மேலதிகமாக யாரையும் அனுப்ப வேண்டாம்” என்று தகவல் கொடுத்தார்கள், ஏற்கனவே அங்கே மறைந்திருந்தவர்கள்.
இதற்கிடையே, அல்-ஸவாகியும் அவருடன் வந்தவர்களும் பண்ணை வீட்டுக்கு உள்ளே செல்ல, ஏற்கனவே உள்ளே இருந்தவர்களில் சிலர் வெளியே வந்தார்கள். அவர்கள் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிக்-அப் ட்ரக்கில் ஏறி அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
இவர்கள் வெளியேறியதை அடுத்து, பண்ணை வீட்டைச் சூழ்ந்து இருந்த ரேஞ்சர்கள் பதட்டம் அடைந்தார்கள்.
காரணம், வெளியேறிய ஆட்களில் அல்-ஸவாகி இல்லை என்பது உண்மைதான். ஆனால் இதே போல மற்றொரு செட் ஆட்களும் வெளியேறும்போது, அவர்களுடன் அல்-ஸவாகியும் வெளியேறலாம் அல்லவா? அப்படி நடந்தால் கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாது போய்விடுமே..
அல்-ஸவாகியும் எந்த நிமிடத்திலும் பண்ணை வீட்டிலிருந்து வெளியேறிவிடலாம் என்ற தகவல், பண்ணை வீட்டை சூழ்ந்து மறைந்திருந்த ராணுவ ரேஞ்சர்களால் சி.ஐ.ஏ.வின் ஆபரேஷன் சென்டருக்கு கொடுக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், சி.ஐ.ஏ. ஆபரேஷன் சென்டரிலிருந்து பதில் வந்தது.
“பண்ணை வீட்டை நீங்கள் உடனடியாக தாக்க முடியுமா? உள்ளே இருக்கும் அல்-ஸவாகியை உங்களால் தாக்குதல் நடத்தி கைப்பற்ற முடியுமா” என்று கேட்கப்பட்டது.
பண்ணை வீட்டைச் சூழ மறைந்திருந்த அமெரிக்க ராணுவ ரேஞ்சர்கள் வெறும் மூன்றே மூன்று பேர்தான். அவர்களிடமும் ஆளுக்கொரு துப்பாக்கிதான் இருந்திருக்கிறது. வீட்டுக்குள் இருக்கும் அல்-ஸவாகியிடமும் மற்றயவர்களிடமும் நிச்சயம் துப்பாக்கிகள் இருக்கும். இதனால், ராணுவ ரேஞ்சர்கள் பண்ணை வீட்டை தாக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
அந்த நிலையில் உள்ள ஒரேயொரு வழி, அவசர அவசரமாக விமானத் தாக்குதல் நடத்துவதுதான் என்று சி.ஐ.ஏ. ஆபரேஷன் சென்டரில் அவசர முடிவு எடுக்கப்பட்டது.
அல்-ஸவாகி எந்த நிமிடத்திலும் அந்த வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிடலாம் என்ற நிலையில், ஈராக்கில் அமைந்திருந்த அமெரிக்க விமானப்படை தளத்திலிருந்து போர் விமானங்களை தாக்க அனுப்புவது கூட காலதாமதமாகி விடும்.
அமெரிக்கர்களின் நல்ல காலம், இந்த பண்ணை வீடு இருந்த வான் பகுதியிலிருந்து சுமார் 30 கி.மீ.களுக்கு அப்பால் வேறு ஒரு தாக்குதல் ஆபரேஷனுக்காக நான்கு F-16 விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. குண்டுவீச்சு ஆபரேஷனில் இருந்த அந்த 4 விமானங்களில், இரு விமானங்களில் மட்டும் 500 பவுண்ட் குண்டுகள் போடப்படாமல் இருந்தன.
உடனடியாக தரையில் இருந்து அந்த இரண்டு விமானங்களின் விமானிகளுக்கும் தகவல் தெரிவித்து, அந்த ஆபரேஷனை இடைநிறுத்தினார்கள். குண்டுகளை வைத்திருந்த இரு விமானங்களையும் உடனே திசைதிருப்பி, பண்ணை வீடு இருந்த லொகேஷன் கொடுத்து, அங்கே சென்று குண்டுவீச உத்தரவு கொடுக்கப்பட்டது.
சரியாக மாலை 6.12க்கு, பண்ணை வீட்டின் மீது துல்லியமாக முதலாவது குண்டை வீசியது F-16 போர் விமானம்.
முதலாவது குண்டுவீச்சின் போதே, அல்-ஸவாகி, அப்துல் ரஹ்மான், ஸவாகியின் 16 வயது மனைவி, மிஸ்டர் எக்ஸ், மற்றும் ஒரு ஆண், இரு பெண்கள் ஆகியோர் கொல்லப்பட்டார்கள்.
அப்படியிருந்தும், யாரும் தப்பக்கூடாது என்பதற்காக, இரண்டாவது விமானமும் அதே இலக்கின்மீது தன்னிடமிருந்த குண்டை வீசியது. பண்ணை வீடு தரைமட்டமாகியது.
தாக்குதல் நடந்து முடிந்து, விமானங்கள் அங்கிருந்து அகன்ற பின் பண்ணை வீட்டுக்கு வெளியே மறைந்திருந்த ராணுவ ரேஞ்சர்கள் ஓடிச் சென்று இடிபாடுகளில் பார்த்தபோது, பண்ணை வீட்டில் குண்டுவீச்சு நடத்தப்பட்ட போது, அங்கு பெரிய விருந்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது தெரிந்தது.
டின்னர் பார்ட்டி நடந்து கொண்டிருந்தபோதே, குண்டுகள் போய் விழுந்திருக்கின்றன!
இந்த இரு F-16 போர் விமானங்களும் பண்ணை வீட்டில் இருந்து சுமார் 30 கி.மீ.களுக்கு அப்பால் வேறு ஏதோ ஆபரேஷனில் குண்டுவீச பறந்து கொண்டு இருக்காவிட்டால், ஒருவேளை அல்-ஸவாகி தப்பியிருக்கலாம்.
அதே நேரத்தில், அந்த வேறு ஒரு ஆபரேஷனில் குண்டுவீசுவது கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டதால், அங்கு வேறு யாருக்கோ, ஆயுசு கெட்டி! அந்த வகையில் அல்-ஸவாகி தனது உயிரை கொடுத்து வேறு யாருடைய உயிரையோ காப்பாற்றினார் என்றுகூட சொல்லலாம்.
அறிவியல்
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!