Tuesday, April 9, 2013

உப்பு, சரக்கு, தம்.. உஷார் ஹை பீ.பி. நெருங்காது

உப்பு, சரக்கு, தம்.. உஷார் ஹை பீ.பி. நெருங்காது


‘அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்’ என்பது இந்த ஆண்டின் மைய கருத்தாக கடைபிடிக்கப்படுகிறது. 1948-ம்  ஆண்டு உலக சுகாதார அமைப்பின் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற உறுப்பினர்கள் 1950-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம்  தேதியை உடல் ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உலக சுகாதார தினமாக கொண்டாடுவது என்று முடிவு  செய்தனர்.

அதன்படி உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு  ஆண்டும் ஒரு மைய கருத்துடன் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு, உடல்நலம் பேணுவோம். ஆயுளை அதிகரிப்போம் என்பதை  நோக்கமாக கொண்டு கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, ரத்த அழுத்தத்தை தவிர்ப்போம் என்ற நோக்கத்தை  அடிப்படையாக கொண்டுள்ளது.

அதிக ரத்த அழுத்தம் என்பது நாளாவட்டத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மாரடைப்பு, ஸ்டிரோக், சிறுநீரகம் செயலிழப்பு ஆகியவற்றை  ஏற்படுத்துகிறது. கண்டுகொள்ளாவிட்டால் பார்வை இழப்பும் ஏற்படும். கடைசியில், இதய துடிப்பு தாறுமாறாகி இதயத்தின் இயக்கத்தை நிறுத்தி  இறப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயமும் இருக்கிறது. அதே நேரம், உரிய நேரத்தில் கண்டுபிடித்து எச்சரிக்கையாக இருந்தால் அதிக ரத்த அழுத்தம்  என்பது தடுக்கக்கூடியதே.

ஒருவேளை வந்துவிட்டாலும் சிகிச்சை பெற்று குணமாகிவிடக்கூடியதே. சராசரியாக, உலக அளவில் மூன்றில் ஒருவர் அதிக ரத்த அழுத்தத்தால்  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 20-30 வயதுகளில் இருக்கும்போது 10 பேரில் ஒருவருக்கு மட்டுமே அதிக ரத்த அழுத்தம் இருக்கிறது. 50 வயதை  நெருங்கும்போது ஏறக்குறைய 10 பேரில் 5 பேருக்கு அதிக ரத்த அழுத்தம் இருக்கிறது. ஆப்ரிக்கா போன்ற வருமானம் குறைந்த நாடுகளில் 40  சதவீதம் பேருக்கு அதிக ரத்த அழுத்தம் இருக்கிறது.

உலகளவில் மிக இளம் வயதிலேயே இறப்பவர்கள் எண்ணிக்கை 91 லட்சத்தை தாண்டி செல்கிறது. இந்த எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகம்  என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கு புகையிலை பழக்கம், சீரற்ற உணவு பழக்க வழக்கம், மது, போதிய  உடற்பயிற்சி இன்மை ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை எதிரொலியாக நோய் தொற்றில்லா பாதிப்புகளான ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய் பரிசோதனைகளை  மத்திய, மாநில அரசுகள் கடந்த ஆண்டே தொடங்கி நடத்தி வருகின்றன. அதற்கேற்ப நாமும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
‘அதிக ரத்த அழுத்த பாதிப்பு வந்துவிட கூடாது’ என்று நினைப்பவர்கள் என்ன செய்தாக வேண்டும் என்று 6 அம்சங்களை உலக சுகாதார நிறுவனம்  பட்டியல் போட்டிருக்கிறது.

உணவில் உப்பு அதிகம் சேர்க்க கூடாது.
எல்லா சத்துகளும் கிடைக்கும் வகையில் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும்.
உடல்நலனை பாதிக்கும் அளவுக்கு மது அருந்த கூடாது.
போதிய அளவில் உடல் உழைப்பு இருக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
உயரம், வயதுக்கு ஏற்ற அளவிலேயே பருமன் இருக்க வேண்டும். அதிகம் இருந்தால் கட்டுப்படுத்த வேண்டும்.
புகையிலை மற்றும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை தவிர்க்க வேண்டும்.

இவற்றை பின்பற்றி, ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்போம். ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வோம் என இந்நாளில் உறுதிகொள்வோம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!