Tuesday, January 22, 2013

அறிவியலின் முதல் அரசியல் ஆக்கம்

2017 இல் மீண்டும் தான் மட்டுமே உலக வல்லரசு என்பதை ஆணித்தரமாக நிரூபிக்க முயலும் அமெரிக்கா



2017ல் எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியாவை முந்தப் போகும் அமெரிக்கா!


2017ம் ஆண்டு சவுதி அரேபியாவை பின் தள்ளி அமெரிக்கா உலகின் முன்னனி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும், 2030ல் அமெரிக்கா நிகர எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாற போகிறது என்ற செய்தியை கேட்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா?. களிப்பாறை (shale gas) எரிவாயு மற்றும்

களிப்பாறை எண்ணையை எடுக்கும் ஆராய்ச்சியில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட அராய்ச்சியின் முன்னேற்றத்தால் அமெரிக்காவின் எண்ணெய் சுயசார்பு பெற வேண்டும் என்ற 1970களின் கனவு நினைவாக தொடங்கியிருக்கிறது.

சமீபத்தைய பொருளாதார மந்த நிலையால் வலுவிழந்து இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் புத்தணர்வு ஊட்டும் ஒரு காரணியாக இருக்க இது வாய்ப்புள்ளது. இது அமெரிக்க பொருளாதாரத்திலும் உலக பொருளாதாரத்திலும், நாடுகளுக்கிடையிளான உறவுகளிலும் ஏற்படுத்த போகும் மாற்றம் கணிசமாக இருக்க கூடும்.

களிப்பாறை எரிவாயு/எண்ணெய் என்றால் என்ன?:


களிப்பாறை எரிவாயு மற்றும் எண்ணெயும் பெட்ரோல் போன்றே பல மில்லியன் அண்டுகளுக்கு முற்பட்ட தாவர, விலங்குகள் மக்கியதால் உருவானவை. இந்த எண்ணெயும் எரிவாயும் பூமிக்கு சில ஆயிரம் அடிகளுக்கு கீழே களிப்பாறை எனப்படும் கடினமான பாறைகளுக்கு இடையே அடைபட்டுள்ளன.

இவை பூமிக்கு மிக அடியில் இருப்பதாலும் பாறைகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாலும் இவற்றை வெளி கொணர்வதில் பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பல பிரச்சனைகள் இருந்தன.

தற்போது ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொருளாதார ரீதியாகவும், 1970ம் ஆண்டுகளிலிருந்து ஏற்பட்ட தொழிற்நுட்ப வளர்ச்சிகளாலும் களிப்பறை எரிவாயு மற்றும் எண்ணெயை எடுப்பது சாத்தியமாக தொடங்கியுள்ளது.

இந்த எரிவாயுவை எப்படி எடுக்கிறார்கள் என்பது பற்றியும், அது பற்றிய சுற்றுசூழல் காப்பளர்களின் அச்சம் பற்றியும் அது உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் மாற்றம் பற்றியும் காண்போம்.

களிப்பாறை எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுக்கும் முறை...


1. முதலில் குழாய்களை ஆழ் துளையிடும் சாதனம் மூலம் உள்ளே செலுத்தி கீழ் நோக்கி கொண்டு செல்வார்கள். பூமியில் தண்ணீர் இருக்கும் ஆழத்திற்கும் மேலாக கீழ் செலுத்துவர்.

2. பிறகு குழாயை வெளியே எடுத்து அந்த ஓட்டையை சுற்றியும் வலிமையான மேற்பரப்பு வார்ப்பு (surface casting) கொடுத்து அதன் மேல் மீண்டும் சிமெண்டு அடுக்கு ஒன்றை பூசி வெளி பரப்பிற்கும் குழய்க்கும் இடையே ஒரு கடுமையான தடுப்பை ஏற்படுத்துவர். இதன் மூலம் பின்னாளில் செலுத்த இருக்கும் வேதி பொருட்கள் நிலத்தடி நீரில் கலந்து விடாமல் இருக்க உதவும்.

3. பிறகு மீண்டும் வெளியில் எடுக்கப்பட்ட ஆழ் துளையிடும் சாதனங்களை கொண்டு கீழ் நோக்கி துளையிடுவது தொடரப்படும். இது சில ஆயிரம் அடிகளுக்கு மேலானதாக இருக்கும். களிப்பாறையை நெருங்கியவுடன் வளைவாக துளையிட தொடங்குவர். அது களிப்பாறைக்குள் நன்கு சென்றவுடன் செங்குத்தாக செல்வதை விடுத்து மட்ட வாக்கில் (Horizontal Drilling) துளையிடத் தொடங்குவர்.

4. மட்ட வாக்கில் செல்லும் துளை மூலம் அதனை சுற்றியுள்ள களிபாறையிலிருந்து எண்ணெய் மட்டும் எரிவாயுவை எடுக்க முடியும். எனவே இந்தத் துளையின் நீளம் அதிகமாக இருக்கும். துளையிடுவது முடிந்த பின் வழக்கம் போல் மேற்பரப்பு வார்ப்புகளும் சிமெண்ட் பூச்சுகளும் பூசபடும்.

5. அதன் பின் துளையிடும் துப்பாக்கி அந்த மட்ட வாக்கு குழியின் உள் செலுத்தப்படும். துளையிடும் துப்பாக்கி என்பது இரும்பு குழாயில் பல துளைகளை கொண்டதாகும். இந்த குழாய்கள் மட்ட வாக்கு துளையினுள் செலுத்தப்படும். அந்த குழாய் மூலமாக களிபாறையினுள் சிறு துளையை ஏற்படுத்துவர்.

6. மிகவும் இருக்கமான களிபாறையினுள் எண்ணெயும் வாயுவும் மாட்டி கொண்டு இருப்பத்தால் பாறைக்குள் பல வெடிப்புகளை ஏற்படுத்த வேண்டும் அந்த வெடிப்புகளின் வழியே எரிவாயுவையும் எண்ணெயையும் எடுக்க முடியும். வெடிப்புகளை ஏற்படுத்த கடைபிடிக்கும் முறைக்கு நீரியல் முறிவு (Hydralic Fracturing) என்று பெயர்.

நீர் (90%), மணல் (9.5%) மற்றும் வேதி பொருட்கள் (0.5%- சோடியம் குளோரைடு, எத்திலின் கிளைக்கால், போரேட் உப்பு, சோடியம்/பொட்டாசியம் கார்பனேட், ஐசோ புரொப்பனால் மற்றும் பாலிசாக்கரைடுகள் கலந்த கலவை) கலவையை மிகவும் அதிகமான அழுத்தத்துடன் உள் செலுத்துவர். இந்த கலவை துளையிடும் துப்பாக்கி ஏற்படுத்திய துளைகளின் வழியே வேகமாக வெளி சென்று கடினமான களிபாறையினுள் பல வெடிப்புகளை ஏற்படுத்தும்.

7. களிபாறையின் வெடிப்பு மூலம் வெளிவரும் வாயு குழாயினுள் உள்ள துளை மூலம் குழாயினுள் வந்து அது பூமிக்கு மேல் வரும்.

அமெரிக்காவில் களிப்பாறை எரிவாயு புரட்சி


சுற்றுசூழல் பிரச்சனைகள்:


பெட்ரோல் துரப்பணம் சார்ந்த தொழில்நுட்பம் என்றாலே அது ஏற்படுத்த கூடிய சுற்றுசூழல் சீற்கேடு பற்றிய கவலை அனைவருக்கும் இருக்கும். களிப்பாறை எரிவாயு தொழில் நுட்பமும் சுற்றுசூழல் ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகி உள்ளது. உதாரணமாக நீரியல் முறிவு ஏற்படுத்த பயன்படுத்தும் வேதி பொருட்கள் நிலத்தடி நீரில் சேர்ந்தால், அது தண்ணீரை விஷமாக்க கூடும் என்று கருதுகிறார்கள்.

ஆனால் எரிவாயு நிறுவனங்களோ வலிமையான வார்ப்பு இருப்பதால் இந்த தொழில்நுட்பத்தில் பயன்படுத்தும் வேதி பொருட்கள் நிலத்தடி நீரில் கலக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

ஆனால் இந்தப் பணியின் போது வெளியேறும் மீத்தேன் வாயு தண்ணிரில் கலக்க வாய்ப்புள்ளது என்று குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் எண்ணெய் துரப்பண பகுதியில் பூகம்பம் ஏற்பட்டால் வேதி பொருட்கள் பெருமளவு தண்ணீரில் கலக்கவும் வாய்ப்புள்ளது.




எங்கும் உள்ளது களிப்பாறை.. ஆனால்:


தற்போது உலக கச்சா எண்ணெய் சந்தையை பெரும்பன்மையாக கட்டுப்படுத்துவது அரபு நாடுகள் மற்றும் ரஷ்யா மட்டுமே. களிப்பாறை எரிவாயு மற்றும் எண்ணெய் ஒரு சில நாடுகளின் பிடியில் மட்டும் சிக்காமல் உலகெங்கும் பரவியிருக்கிறது. தற்போது ஒவ்வொரு நாட்டின் கையிருப்பும் தோராயமாக தான் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் எந்த அளவு இவ்வகை எரிபொருள் இருக்கிறது என்பது இன்னும் முழுமையாக கணக்கிடப்படவில்லை.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ள களிப்பாறை எரிவாயுவை கீழே காணலாம். (இந்த கணக்கு எரிவாயு கையிருப்பு பற்றி மட்டும் காட்டுகிறது. களிப்பாறை எண்ணெய் சேர்க்கபடவில்லை).

பகுதி- எரிவாயு இருப்பு (trillian cubic meterகளில்)

கிழக்கு ஐரோப்பா/முன்னாள் சோவியத் பகுதிகள்- 174
அரபு நாடுகள்- 137
ஆசியா/பசுபிக்- 132
அமெரிக்கா- 122
ஆப்பிரிக்கா- 74
தென் அமெரிக்கா- 71
மேற்கு ஐரோப்பா- 45

அமெரிக்கா, சவுதி அரேபியா, ஈரான் மற்றும் கத்தாரில் எளிதில் கிடைக்கும் களிப்பாறை எரி வாயு மிகுந்துள்ளது. அமெரிக்காவில் மக்கள் நெருக்கம் குறைந்த பகுதியில் அதிகம் எரிவாயு/எண்ணெய் உள்ளது. மேலும் அங்கு நில உரிமையாளர்களுக்கே பூமிக்கடியில் உள்ள இயற்கை வளம் சொந்தம். மேலும் அங்கு தொழில் நுட்ப வளர்ச்சியும் முதலீடும் அதிகம் உள்ளதால் தற்போது அமெரிக்காவில் பெருமளவு களிப்பாறை எரிவாயு எடுக்கப்படுகிறது.

மேற்கு ஐரோப்பாவில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் எரிவாயு இருக்கிறது. எனவே அதனை எடுப்பதில் மக்கள் எதிர்ப்பும் சுற்றுசூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பும் அதிகமாக இருக்ககூடும்.

சீனாவில் எளிதில் எடுக்க முடியாத நிலையில் இந்த எரிபொருள் இருப்பதால் புதிய தொழில்நுட்பம் தேவைப்படலாம். மேலும் எரிபொருள் கிடைக்கும் இடமும் உபயோகிக்கும் இடமும் வெகு தொலைவில் உள்ளதால் நீண்ட தூர குழாய் கட்டமைப்பு தேவைப்படலாம்.ஆனால் சீனாவுக்கு இது போன்ற மிக பெரிய அடிப்படை கட்டமைப்பு செய்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

இந்தியாவில் அஸ்ஸா மற்றும் அருணாச்சல் பிரதேசத்தில் அதிக அளவு எரிபொருள் இருப்பதாகக் கருதபடுகிறது. சமீபத்தில் சீனா அருணாச்சல் பிரதேசம் மீது அதிக அளவில் உரிமை கோரிவருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் களிப்பாறை எரிவாயு புரட்சி:

பொதுவாக எரிவாயு பெட்ரோலுக்கு மாற்றாக இருப்பதால் அதன் விலையும் சந்தையில் பெட்ரோல் விலையை சார்ந்தே இருக்கும். அது மட்டுமின்றி எரிவாயுவின் விலையை நிர்ணயிப்பதில் அது எவ்வாறு உற்பத்தியாகும் இடத்திலிருந்து உபயோகபடுத்தும் இடத்திற்கு கொண்டு செல்லபடுகிறது என்பதும் முக்கிய பங்கை வகிக்கிறது.

குழாய் மூலம் எரிவாயுவை கொண்டு செல்ல முடிந்தால் அதன் விலை குறைவாக இருக்கும். ஆனால் எரிவாயுவை திரவமாக்கி கொண்டு செல்ல வேண்டுமானால் அதற்கு கூடுதல் செலவாகும். (அதனால் தான் இந்தியா ஈரானிடமிருந்து குழாய் மூலம் எரிவாயுவை கொண்டு வர முயற்சித்தது நினைவிருக்கலாம்).

அமெரிக்காவில் தற்போது அதிக அளவில் உற்பத்தியாகும் களிப்பாறை எரிவாயுவின் விளைவாக அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய்க்கும், எரிவாயுவிற்கும் இடையே இருந்த விலை நிர்ணய உறவு அறுக்கபட்டு எரிவாயுவின் உற்பத்தி மற்றும் தேவையை கொண்டு அமெரிக்காவில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அதன் விளைவாக அமெரிக்காவில் எரிவாயுவின் விலை $2.50 mBtu ஆகவும், ஐரோப்பாவில் குழாய் மூலம் கிடைக்கும் எரிவாயுவின் விலை $12 mBtu ஆகவும், திரவ நிலையில் எரிவாயுவை வாங்கும் ஆசியாவில் $16 mBtu ஆகவும் உள்ளது.

குறைந்த விலையில் எரிபொருள் கிடைத்தவுடன் அமெரிக்காவில் மாற்றங்கள் பல தொடங்கி விட்டன.

1. அமெரிக்கா தனது திரவ எரிபொருள் தேவையில் தற்போது 45% மட்டுமே இறக்குமதி செய்கிறது. 2005ல் இது சுமார் 60% இருந்தது (பொருளாதார வளர்ச்சி மந்த நிலை கூட இதற்கு சிறிய பங்கு வகிக்கிறது). இது நிகர ஏற்றுமதி- இறக்குமதி பற்றாகுறையை ஓரளவு கட்டுபடுத்த உதவுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் OPEC நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயில் 20% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2. அமெரிக்க மக்களின் எரி பொருள் செலவில் இந்த விலை குறைப்பின் விளைவாக சேமிப்பு மட்டும் 2015ம் ஆண்டில் $113 பில்லியன் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

3. எரி வாயுவை முக்கிய தேவையாக கொண்ட பிளாஸ்டிக், உரம், வேதி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் ஆசியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர ஆரம்பித்துள்ளன. டௌ கெமிக்கல்ஸ் போன்ற கம்பெனிகள் 91 வகை பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை சுமார் 70 பில்லியன் டாலர் முதலீட்டில் அமெரிக்காவில் தொடங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

4. கடந்த 5 வருடங்களில் 600 பில்லியன் டாலருக்கு மேலாக இந்த துறையில் முதலீடு குவிந்துள்ளது.

சர்வதேச பொருளாதார, அரசியல், சுற்றுச்சூழல், அதிகார மாற்றங்கள்


இந்த களிப்பாறை எரிவாயுவும் எண்ணெயும் சர்வதேச பொருளாதாரம், அரசியல் மற்றும் சுற்றுசூழலியலில் ஏற்படுத்த கூடிய மாற்றங்கள் பற்றி காண்போம்.

1. சுற்றுச் சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தும் நிலக்கரிக்கு மாற்றாக மின் உற்பத்தியில் எரிவாயு விளங்குவதால், சுற்றுசூழல் சீர்கேடு ஓரளவு குறைய வாய்ப்புள்ளது. ஏனென்றால் புவியை சூடேற்றும் வாயுக்களை நிலக்கரியை விட எரிவாயு குறைவாகவே வெளியிடுகிறது.

2. அதே சமயம் தற்போது மரபு சாரா பசுமை எரி சக்தி ஆராய்ச்சி மற்றும் உபயோகத்துக்கு இந்த மலிவான எரிபொருள் ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளது.

3. மக்கள் நெருக்கம் உள்ள ஆசிய, ஆப்ரிக்க பகுதிகளில் இவ்வகை எரிபொருளை அதிக அளவில் எடுக்க ஆரம்பித்தால் மனித செலவு (Human Cost) அதிகமாக இருக்க கூடும். அது மட்டுமன்றி நிலத்தடி நீர் மாசுபடுதல் பற்றி நிறைய சர்ச்சைக்குறிய செய்திகள் வருவதையும் கவனிக்க வேண்டும்.

4. சமீபத்தைய பொருளாதார நெருக்கடியாளும், அரசு மற்றும் வர்த்தக பற்றாகுறையாளும் அமெரிக்க நாணயத்தின் நம்பகத்தன்மை மேல் சந்தேகம் வந்து உலக பொது நாணயமாக யூரோ, யுவான் போன்ற நாணயங்கள் வருமா என்று விவாதம் தொடங்கபட்டது. ஆனால் இந்த களிபாறை எரிவாயுவின் மூலம் அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாகுறை குறைந்து, தொழில் வளர்ச்சியின் மூலம் அரசு பற்றாகுறை குறைந்தால் மீண்டும் டாலர் வலிமையுடன் தன்னுடைய பழைய ஆதிக்கத்தையே தொடர வாய்ப்புள்ளது.

5. அமெரிக்கா தன் எண்ணெய் மற்றும் உற்பத்தி பொருட்கள் இறக்குமதியை பெருமளவு குறைத்தால், உலக சந்தையில் டாலர் கிடைப்பது அரிதாக கூடிய நிலை வரலாம். அது சர்வதேச சந்தையில் ஏற்படுத்த கூடிய மாற்றங்களை கணிப்பது கடினம்.

6. அமெரிக்காவின் ஆற்றல் தேவைக்காக அரபு நாடுகளை சார்ந்திருக்கும் நிலை மாறகூடும். தன் தேவைக்காக அரபு நாடுகளின் ஆட்சியாளர்களை தூக்கவும், காக்கவும் நடத்த வேண்டிய போர்கள் குறைய கூடும்.

7. பெட்ரோல் வியாபாரத்துக்கு தற்போது மேலை நாடுகளை பெருமளவு சார்ந்து இருக்கும் அரபு நாடுகள் இனி தன் பார்வையை வளர்ச்சி பாதையில் செல்லும் சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகள் மீது அதிகம் காட்ட கூடும். மேலை நாடுகளின் கட்டுபாடு குறைந்த OPEC நாடுகளின்& எரிபொருள் வியாபாரம் நல்ல மாற்றத்தை கொடுக்குமா இல்லையா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

தற்போது எரிவாயுவின் விலை சர்வதேச அளவில் ஒரே மாதிரியாக நிர்ணயிக்காமல் அமெரிக்காவில் தனியாகவும் இதர பகுதிகளில் தனியாகவும் நிர்ணயிக்கப்படும் நிலை பெட்ரோலுக்கும் வருமா என்பது முக்கிய கேள்வியாக இருக்கும்.

8. எரிபொருள் சுயசார்பு பெற்ற அமெரிக்கா அரபு நாடுகளிலிருந்து உலக எரிபொருள் சப்ளையில் ஆர்வம் காட்டாவிட்டால் எரிபொருள் தேவை நிறைந்த மேற்கு ஐரோப்பா நாடுகளின் நிலை கவலைக்குள்ளாக வாய்ப்புள்ளது. அவர்கள் தேவையை அவர்களே பார்த்து கொள்ள வேண்டிய நிலை வரலாம்.

9. மலிவு எரிபொருள் அமெரிக்காவில் அதிகம் கிடைத்து மேற்கு ஐரோப்பாவில் குறைவாக கிடைத்தாலும், வளரும் நாடுகளில் சீனாவில் அதிகம் கிடைத்து இந்தியாவில் (தற்போதைய நிலவரபடி) குறைவாக கிடைத்தாலும் சர்வதேச அளவில் பல்வாறு நாடுகளின் வளர்ச்சியில் மிக பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்.

10. களிப்பாறை எரிவாயுவினால் சர்வதேச கச்சா எண்ணையின் விலை குறைப்பு ஏற்பட்டால் அதனால் அரேபிய மற்றும் ரஷ்ய நாடுகளில் ஏற்படும் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் கணிசமாக இருக்க கூடும்.

சர்வதேச எரிபொருள் விலையை நிர்ணயிப்பதில் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் பங்கு முக்கியவத்துவம் வகிப்பதால், களிப்பாறை எரிவாயு விஷயத்தில் எண்ணெய் நிறுவனங்கள் எப்படி& செயல்படப் போகின்றன என்பதும் முக்கியம்.

தற்போது கிடைக்கும் மலிவான முதலீடு காரணமாகவும், கடுமையான போட்டி காரணமாகவும் களிப்பாறை எண்ணெய்/எரிவாயு எடுக்கும் நிறுவனங்கள் வருங்கால வருமானத்தை நம்பி தற்போது நஷ்டத்தில் இயங்குவதாகவும் கூறப்படுகிறது. அதன் விளைவாக இது ஒரு பொருளாதார குமிழை மட்டும் ஏற்படுத்தும் என்று ஒரு சில பொருளாதார நிபுணர்கள் எச்சரிப்பதும் கவனிக்கத்தக்கது.

எது எப்படியோ பிற்காலத்தில் எரிபொருள் குறைந்த விலையில் கிடைத்தால் பணவீக்கம் குறைந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரமும் உயர வாய்ப்பிருக்கும்

கொசுறு செய்திகள்..

1. களிபாறை எரிவாயு/எண்ணெய் எடுக்கும் நீர்ம பிரிப்பு (hydraulic fracturing) முறைக்கு தேவைப்படும் மூலபொருட்களுள் ஒன்று நம் ஊர் கொத்தவரங்காய். அமெரிக்காவில் களிபாறை எண்ணெய் எடுக்க இது ஏற்றுமதியாக ஆரம்பித்துவிட்டதால் ராஜஸ்தான் மற்றும் வட மாநிலங்களில் கொத்தவரங்காய் விலை சுமார் 10 மடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் நல்ல லாபம் அடைந்து வருகின்றனர்.

2. களிப்பாறை எரிவாயுவிற்கு எதிரான கருத்துகளை அமெரிக்க மக்களிடையே விதைக்க அரபு நாடுகளின் நிதி உதவியுடன் ஹாலிவுட் படம் ஒன்றும் எடுக்கபட்டு வருகிறது... இது எப்டி இருக்கு!!




No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!