கும்பமேளா: புனித நீராடுவது மட்டுமல்ல… அது ஒரு புனித அனுபவம்
அலகாபாத்: உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் மகா கும்பமேளா தொடங்கியுள்ளது. இந்த மகா கும்பமேளாவில் யமுனை, கங்கை, சரஸ்வதி நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகா கும்பமேளா ஜனவரி 14ம் தேதி மகரசங்கராந்தி தினத்தன்று தொடங்கி மகா சிவராத்திரி நாள்வரை 55 நாட்கள் நடைபெறுகிறது. கும்பமேளாவின் தொடக்கநாளன்று ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் அலகாபாத் நகரில் குவிந்தனர். கிட்டத்தட்ட 80 லட்சம் பக்தர்கள் அன்றைய தினம் புனித நீராடினர் என்று தெரிவிக்கிறது புள்ளிவிபரம். ஒரு நாளைக்கு 20 லட்சம் பக்தர்கள் வீதம் மொத்தம் 10 கோடி பக்தர்கள் கும்பமேளாவுக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூர்ண கும்ப மேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்,
ஆர்த கும்ப மேளா 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
கும்பமேளா ஹரித்துவாரில் முதலில் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பிரயாக், நாசிக், உஜ்ஜயினி நகரில் நடைபெறுகிறது. கும்பமேளா திருவிழா ஹரித்துவார், பிராயாக், நாசிக், உஜ்ஜயினி, ஆகிய மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
அமுதம் சிந்திய நகரங்கள்
இந்த நகரங்களில் மட்டும் ஏன் கும்பமேளா நடைபெறுகிறது என்பதற்கு ஒரு புராண கதை கூறப்படுகிறது. தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, இந்திரனின் மகன் ஜெயந்தனுக்கு அவசரம் தாங்கவில்லை. பறவை வடிவில் வந்து அமுதக் கும்பத்தைத் தூக்கிக்கொண்டு பறந்தான். அசுரர்கள், வாயு வேகத்தில் அவனைத் தொடர்ந்தார்கள். இருவருக்கும் இடையே பன்னிரண்டு நாட்கள் (அதாவது பன்னிரண்டு வருடங்கள்) இழுபறிப் போர் நடந்தது. அந்த சமயம் சந்திரன் கும்பத்திலிருந்து அமுதம் சிந்தாமல் தடுக்க முயற்சி செய்தான். சூரியன், கும்பம் உடைந்து விடக்கூடாதே என்று வருத்தப்பட்டான். பிரகஸ் பதி அசுரர்கள் அபகரித்துச் சென்றுவிடாமல் காப்பாற்ற முயன்றான். சனி பகவானோ, ஜயந்தன் ஒரே மிடறில் சாப்பிட்டுவிட்டால் என்ன செய்வதென்று கவலைப் பட்டான். இப்படி நால் வரும் கூடி முயன்றும் நான்கு இடங்களில் அமுதம் சிந்திவிட்டது. அதன் விளைவால் அந்த இடங்களின் புனிதம் பலமடங்கு உயர்ந்தது. அந்த இடங்கள்தான் ஹரித்வார், பிரயாகை, உஜ்ஜயினி, நாசிக் ஆகியவை.
பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள்
கோடிக்கணக்கான பக்தர்கள்... நகரமெங்கும் ஹரஹர முழக்கம்... திரிவேணி சங்கமத்தில் திரண்டுள்ள பக்தர்களின் வசதிக்காக 770 கி.மீ நீளத்திற்கு மின்சார கேபிள்களை இணைத்து 22000 தெருவிளக்குகளை அமைத்துள்ளனர். 550 கிலோ மீட்டர் நீளத்திற்கு பைப் லைன்கள் அமைத்து நளொன்றுக்கு 80000 கிலோலிட்டர் தண்ணீர் சப்ளை செய்கின்றனர். பக்தர்களுக்காக 12000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கும்பமேளா நடைபெறும் இடத்துக்கு அருகே 35 ஆயிரம் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 14 மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விழா நடைபெறும் இடத்தில் இருந்து 150 கி.மீ தூரத்துக்கு தற்காலிக ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தை அமாவாசையில் கூட்டம்
அதிகபட்சமாக பிப்ரவரி 10 தை அமாவாசை தினம் வட மாநிலங்களில் மவுனி அமாவாசையாக அனுஷ்டிக்கப்படுகிறது. உத்தராயண புண்ணிய காலத்தில் வரும் அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாள். இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங் களிலோ நீராடி மூன்னோர்களை வழிபடுவது மரபு. கும்பமேளா நடைபெறும் இந்த சமயத்தில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு அன்றைய தினம் 3 கோடி பக்தர்கள் நீராட திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பிப்ரவரி 15ம் தேதி வசந்த பஞ்சமி அன்று ஒரே நாளில் பல லட்சம் பக்தர்கள் வருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பமேளாவில் புனித நீராடினால்
கங்கையில் நீராடினால் புண்ணியம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கும்பமேளா நடைபெறும் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் குளிப்பது மட்டுமே நம்பிக்கையில்லை. அது ஒரு வித இறை உணர்வு. தினம் தினம் மந்திர உச்சாடனம், சாதுக்களின் ஜெபம், ஹோமம், நடனம், பிராத்தனை, என கும்பமேளா நடைபெறும் இடமே ஒருவித தெய்வீக தன்மையுடன் காட்சியளிக்கும்.
நிர்வாண சாதுக்கள் ஊர்வலம்
கும்பமேளாவில் உடலெங்கும் திருநீறு பூசியபடி மலர்மாலை மட்டுமே சூடி நாக சாதுக்கள் எனப்படும் நிர்வாண சாமியார்கள் ஊர்வலமாக வருவார்கள். அவர்கள் அனைவரும் ஹர ஹர மகாதேவா என்று மந்திரம் ஜெபித்தவாறு கடுங்குளிரையும் பொருட்படுத்தாது புனித நீராடுவார்கள்.
உத்தரபிரதேசத்திற்கு வருவாய்
அலகாபாத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் நீராட லட்சக்கணக்கான சாதுக்கள் வருவது ஒருபுறம் இருந்தாலும், இதனைக் காண லட்சக்கணக்கான வெளிநாட்டவர் வருகின்றனர். இதன் மூலம் உத்தரபிரதேச மாநிலத்தில் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மாநில அரசுக்கு 12000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
நீராட சிறந்த நாட்கள்
கோடிக்கணக்கான சாதுக்களும், பக்தர்களும் கூடும் இந்த கும்பமேளாவில் 55 நாட்களும் நீராடுவது சிறப்புதான் எனினும், சில நாட்கள் முக்கியமான நாட்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் மகரசங்கராந்தி, ஜனவரி 27ம் தேதி தை பௌர்ணமி, பிப்ரவரி 6ம் தேதி ஏகாதசி, பிப்ரவரி 10ம் நாள் மவுனி அமாவாசை ஆகியவை சிறப்பு வாய்ந்த தினங்களாகும். அதேபோல் பிப்ரவரி 12ம் தேதி கும்பசங்ராந்தி, பிப்ரவரி 15ம் தேதி வசந்த பஞ்சமி, பிப்ரவரி 17 ரத சப்தமி, பிப்ரவரி 18 பீஷ்டாஷ்டமி, பிப்ரவரி 21 ஜெய ஏகாதசி, பிப்ரவரி 25 மகாபூர்ணிமா, மார்ச் 10 நாள் மகாசிவராத்திரி ஆகிய நாட்களும் நீராடுவதற்கு புண்ணிய தினங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
To View Huge collection of Pictures Click Here
Hindu's kumba mela information amazing. Thanks.
ReplyDelete