Wednesday, January 30, 2013

விண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய ஈரான்!!

விண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய ஈரான்!!



அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகளையும் மீறி அணு சக்தி, செயற்கைக் கோள் தயாரிப்பு, ஏவுகணை சோதனை மற்றும் விண்வெளி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.

இந் நிலையில் உயிருள்ள குரங்கை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் அதை பத்திரமாக பூமிக்குக் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ராக்கெட், விண்கலத் தொழில்நுட்பத்தில் அந்த நாடு பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கான நேரடியான சவாலாகக் கருதப்படுகிறது.

ஒரு குரங்குடன் கூடிய விண்கலத்துடன் பிஸ்காம் என்ற ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது. சுமார் 120 கி.மீ. தூரத்தை எட்டிய இந்த ராக்கெட்டிலிருந்து பிரிந்த விண்கலம் பூமிக்குத் திரும்பியது (re entry). அதில், குரங்கும் உயிருடன் பூமிக்குத் திரும்பி வந்தது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் எங்களது முயற்சியில் இது ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சில நாடுகளிடம் மட்டுமே உள்ள இந்தத் தொழில்நுட்பத்தை எங்களது ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிக் காட்டியுள்ளனர் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

ரீ எண்ட்ரி தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ராக்கெட்டை மாற்றி வடிவமைத்தால் அதை ஏவுகணைகளாக மாற்ற முடியும். இந்த ஏவுகணை பூமியிலிருந்து சில நூறு கி.மீ. உயரே சென்று அங்கிருந்து திரும்பி தாக்க வேண்டிய நாட்டின் இலக்கு நோக்கி திரும்பி பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து தாக்குதலை நடத்த முடியும்.

ஏற்கனவே அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஈரானால் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணை தயாரிப்பும் சாத்தியம் என்பதையே இந்த ராக்கெட் சோதனை உறுதிப்படுத்துகிறது. இது இஸ்ரேல், அமெரிக்காவுக்கான எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.

ஆனால், அணு குண்டு தயாரிக்கவில்லை என்றும், மின்சார உற்பத்திக்காகவும், கேன்சர் ட்ரீட்மென்ட் உள்ளிட்ட மருத்துவ காரணங்களுக்காகவுமே அணு சக்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஈரான் கூறி வருகிறது.

இது குறித்து பிரான்சின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான புருனோ குருசெல்லே கூறுகையில், ஈரானின் இந்த ரீ எண்ட்ரி தொழில்நுட்ப ராக்கெட் மிகப் பெரிய சாதனையாகும். பூமிக்கு வெளியே ராக்கெட்டை ஏவி அதில் பொறுத்தப்பட்ட விண்கலத்தை குறிப்பிட்ட இடத்தை நோக்கி திரும்பி வரச் செய்யும் தொழில்நுட்பத்தை ஈரான் பெற்றுவிட்டதாகவே தெரிகிறது.

விண்வெளிக்கு ராக்கெட்டையோ, விண்கலத்தையோ ஏவி அதை பத்திரமாக திரும்பி வரச் செய்ய உயர் அழுத்தத்தைத் தாங்கும், உயர் வெப்ப நிலையைத் தாங்கும் தொழில்நுட்பம் தேவை. இதை ஈரான் பெற்றுவிட்டது. இதனால் இந்த ராக்கெட்டை ஏவுகணையாக மாற்றி அதனால் அணு ஆயுதங்களைக் கூட நெடுந்தொலைவுக்கு ஏவ முடியும் என்றார்.

2011ம் ஆண்டிலேயே விண்வெளிக்கு குரங்கை அனுப்புவோம் என்று ஈரான் கூறி வந்தது. ஆனால், அந்த ஆராய்ச்சிகளில் தேக்கம் ஏற்பட்டதால் சுமார் ஓராண்டு தாமதத்துக்குப் பின் தனது முயற்சியில் வென்றுள்ளது ஈரான்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!