“நாளை உலகம் அழியும் முன் என்ஜாய்” தர்மபுரியில் மக்களுக்கு பணம் கொடுத்த நபர்!
நாளை (21ம் தேதி) உலகம் அழியும் என பரவி வரும் தகவல் காரணமாக, தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த வியாபாரி ஒருவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வந்து, மக்களுக்கு விநியோகித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் தோன்றியதில் இருந்து பல்வேறு காலண்டர் முறைகள் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இவற்றில் ஆதிகாலம் தொட்டு மாயன் காலண்டர் பின்பற்றப்பட்டு வந்தது. மாயன் காலண்டரில் 21-12-2012 தேதிக்கு பின்னர் தேதி பொறிக்கப்படவில்லை. எனவே அன்றைய தினத்துடன் உலகம் அழிந்து விடும் என்ற கருத்து கடந்த சில திங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் பரவியது. இது ஒரு சிலரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த 55 வயதான கரும்பு வியாபாரி குழந்தைதம்பி, 21-ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது என்றும், அதனால் இப்பகுதி மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என கூறிவந்தார். அவர் அப்படிக் கூறியதுடன் நின்றுவிடவில்லை, நேற்று வங்கியில் இருந்து ரூ1 லட்சம் பணத்தை எடுத்து வந்து, அப்பகுதி மக்கள் சிலரிடம் 1000, 2,000 என விநியோகம் செய்தார்.
பணத்தை கொடுத்தபோது அவர், “வரும் 21ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது. அதனால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உலகம் அழிந்து விட்டால் நிறைவேறாத ஆசைகளால் ஆத்மா சாந்தியடையாது. எனவே உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுங்கள்” என்று கூறியபடி பணத்தைக் கொடுத்தார்.
இரந்தும் ஒரு பேக்-அப் பிளானாக, “ஒருவேளை 21ம் தேதி உலகம் அழியாவிட்டால் இந்த பணத்தை திருப்பி கொடுங்கள்” என கூறியுள்ளார்.
இந்த தகவல் பரவியதை அடுத்து தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் அவரை பார்க்க சென்றனர். ஆனால் ஆட்கள் தேடி வருவது தெரிந்தவுடன், அவர் எங்கோ சென்றுவிட்டார். அவரை எங்கு தேடியும் பார்க்க முடியவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!