சர்ச்சைக்குரிய தீவை சீனாவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது: ஜப்பானின் புதிய பிரதமர்
தீவுப் பிரச்னையில் சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், ஜப்பானுக்கே சொந்தமான பகுதி என்றும் அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க உள்ள ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சுதந்திர ஜனநாயகக் கட்சி(எல்டிபி) தலைமையிலான கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ஷின்சோ அபே அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். அபேவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதுடன், புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அபே, தீவுப் பிரச்னையில் சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.
மேலும் எங்கள் கட்சித் தலைமையில் புதிதாக பதவியேற்க உள்ள அரசுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசு நாடான ஜப்பானின் பொருளாதாரம் சர்வதேச நிதிநெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும். யென் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்காகு தீவுக் கூட்டங்கள் (டியாவூஸ் என சீனா அழைக்கிறது) ஜப்பான் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. சர்வதேச சட்டப்படி இந்தத் தீவுக் கூட்டங்களை ஜப்பான் சொந்தம் கொண்டாடுவதுடன், தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
எனவே இதுதொடர்பாக மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. தேசிய நலனை கருத்தில் கொண்டு ஜப்பான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் நல்லுறவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
இதுவிஷயத்தில் சீனா சற்று பின்தங்கி உள்ளது. எனவே, இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து அந்த நாடு தான் சிந்திக்க வேண்டும் என்றார் அபே.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!